ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன்

” உங்களைத் தேடி உங்கள் ஊரில் ” என்னும் சிறப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, கமுதி வட்டம், கோட்டைமேடு பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியில் வளர்க்கப்பட்டு வரும் கால்நடைகளின் எண்ணிக்கை, அவற்றுக்கு முறையாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறதா ? மருத்துவமனையில் தேவையான தடுப்பூசிகள் , மருந்துகள் தேவையான அளவில் இருப்பில் உள்ளதா ? என்பது குறித்து கால்நடை மருத்துவரிடம் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து , கமுதி வட்டம், கோட்டைமேடு பகுதியில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடப் பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இக்கட்டடத்தில் நீதிமன்ற வளாகம், நீதிபதிக்கான குடியிருப்பு, கீழ்த்தளத்தில் வாகன நிறுத்துமிடம் , ஆண், பெண் , மூன்றாம் பாலினத்தவர்களுக்கான தனித்தனி கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகின்றன.

கட்டுமான பணிகளை விரைந்து முடித்திட மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலர்களை அறிவுறுத்தினார். இப்பணிகளை ஆறு மாதங்களுக்குள் முடிப்பதாக அலுவலர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தெரிவித்தனர்.
தொடர்ந்து , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் ரூ.698 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கல்லூரி மாணவியர் விடுதியை பார்வையிட்டு ஆய்வு செய்து, இவ்விடுதியில் 100 மாணவிகள் தங்கும் வகையில் 25 அறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டடம் அமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது மாணவியர் வாடகைக் கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டு வரும் நிலையில், இப்புதிய விடுதி கட்டடம் பயன்பாட்டிற்கு வந்தால் இப்பகுதியில் பயிலும் கல்லூரி மாணவியர்கள் பயனடைவார்கள். எனவே, கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலர்களை அறிவுறுத்தினார்.
கமுதி வட்டத்தில் , தொழிற்பயிற்சி நிலையம் நான்கு பிரிவுகள் செயல்படும் வகையில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டடப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, இக்கட்டடத்தில் கணினி அறைகள், வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மாணவர்களுக்கு தேவையான பயிற்சி வசதிகள் முழுமையாகக் கிடைக்கும் வகையில் கட்டுமானப் பணிகளை விரைவாக முடித்திட மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலர்களை அறிவுறுத்தினார். கமுதி வட்டத்தில் , அரசு மருத்துவமனை ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இக்கட்டடத்தில் படுக்கை வசதிகள், விபத்து , அவசர சிகிச்சைப் பிரிவு, எக்ஸ்ரே அறை, ஆண் மருத்துவர்கள் , பெண் மருத்துவர்களுக்கான தனித்தனி அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மின் பணிகள் நடைபெற்று வருகின்றன. மின் பணிகளை விரைந்து முடித்து, கட்டடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

கமுதி வட்டம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கலை , அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரக்கன்றுகளை நடவுச்செய்து, கல்லூரி மாணவர், மாணவியர்களுடன் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து கமுதி வட்டம், வளையபூங்குளம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அங்கன்வாடி மையத்தில் மின் இணைப்பு வழங்கப்படாமல் இருப்பதை ஆய்வு செய்து, உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, அங்குள்ள நியாய விலைக் கடையை பார்வையிட்டு ஆய்வு செய்து நியாய விலைக் கடையில் மொத்தம் உள்ள குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, இதுவரை எத்தனை குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. வழங்கப்பட்ட பொருட்களின் விவரங்கள் உள்ளிட்டவை குறித்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கேட்டறிந்தார்.

மேலும் , மகளிர் உதவிக்குழு பல்நோக்கு கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து கட்டிடத்தின் தற்போதைய நிலை , பயன்பாடு குறித்து கேட்டறிந்ததுடன், கட்டிடத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்குத் வட்டார வளர்ச்சி அலுவலரை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து , கமுதி பேரூராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்துள்ளதால், போதுமான அளவு குடிநீரைத் தேக்கி வைத்து விநியோகம் செய்ய முடியாதநிலை உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், உரிய திட்ட அறிக்கையைத் தயார் செய்து வழங்குமாறு பேரூராட்சி செயல் அலுவலருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். மேலும், கமுதி பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை முறையாகக் கொட்டுவதற்குப் போதுமான இடவசதி இல்லை எனவும், குப்பைகளைக் கொட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டு வரும் பகுதிகளைச் சுற்றிலும் குடியிருப்புகள் அமைந்துள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, கமுதி பேரூராட்சிக்கு வெளியே குப்பைகளைக் கொட்டுவதற்கு இடத்தைத் தேர்வு செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் , வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, பெறப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறைகளின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது , மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , வளர்ச்சி கூடுதல் ஆட்சியர் திவ்யான்ஷீநிகம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல் மாறன் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கமுதி வட்டாட்சியர் செய்தி – மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் சி.சாலி தளபதி உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed