காஞ்சிபுரம் அடுத்துள்ள சிறுகாவேரிப்பாக்கம், ஜே.ஜே. நகர் பகுதியில் உள்ள ஜெகதீஸ்வரி அம்மன் திருக்கோயிலில் கடந்த மூன்று நாட்களாக ஆடித் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

​இந்தத் திருவிழாவை முன்னிட்டு, அப்பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழக இளைஞர்கள் மற்றும் நிர்வாகிகள், அங்கிருந்த அரசு அங்கன்வாடி மையத்தை முற்றிலும் மறைக்கும் வகையில் பிரம்மாண்ட பேனர்களை அமைத்துள்ளனர்.

திருவிழா நேற்றுடன் நிறைவடைந்த நிலையிலும், வைக்கப்பட்ட பேனர்கள் இதுவரை அப்புறப்படுத்தப்பட வில்லை. இதனால் இன்று காலை வழக்கம்போல் மையத்திற்கு வந்த 25-க்கும் மேற்பட்ட பிஞ்சு குழந்தைகள், உள்ளே செல்ல வழியின்றி பெரும் அவதிக்குள்ளாகினர்.

அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் பேனர்கள் வைக்கப்பட்டது மட்டுமன்றி, அதன் கம்பங்கள் மையத்தின் கட்டிடத்திலேயே முட்டுக்கொடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

​தற்போது ஆடி மாதக் காற்று பலமாக வீசி வரும் சூழலில், ‘ஆடி காற்றில் அம்மியும் பறக்கும்’ என்பதற்கு ஏற்ப, இந்த மெகா சைஸ் பேனர்கள் எப்போது சரிந்து விழுமோ, பிஞ்சுக் குழந்தைகள் மீது பட்டு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் பெற்றோர்கள் உறைந்து போயுள்ளனர்.

​இதன் காரணமாக, இன்று காலை குழந்தைகளை அழைத்து வந்த பெற்றோர்கள் சிலர், அங்கன்வாடி மையத்தின் ஆபத்தான சூழலைக் கண்டு, அச்சத்துடனேயே தங்கள் குழந்தைகளை வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் சென்றனர்.

​அதுமட்டுமின்றி, அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்குச் செல்ல முறையான படிக்கட்டுகள் இல்லாத நிலையிலும், ஆபத்தை உணராமல் மேலே ஏறி பேனர்களைக் கட்டித் தொங்கவிட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில் நடந்துகொள்ள வேண்டும் என்றும், பேனர்கள் வைக்கக் கூடாது என்றும் தமிழக வெற்றி கழகத் தலைமை தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகிறது.

​ஆனால், தலைமை அறிவிப்பையும் மீறி, பிஞ்சுக் குழந்தைகள் படிக்கும் அங்கன்வாடி மையத்தை அடைத்து த.வெ.க நிர்வாகிகள் செய்துள்ள இந்த அராஜகப் போக்கிற்குப் பகுதி பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பையும் கொந்தளிப்பையும் பதிவிட்டு வருகின்றனர்.

​உடனடியாக மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் தலையிட்டு, இந்த ஆபத்தான பேனர்களை அப்புறப்படுத்தி குழந்தைகள் பாதுகாப்பாக கல்வி பயில நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

செய்திகள் ; லக்ஷ்மிகாந்தன் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed