ஸ்ரீபெரும்புதூர் அருகே பாம்பு கடித்து மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட நபருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாகச் செயல்பட்டதால் அவர் பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறி, உறவினர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ரம்பாக்கம் ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் ராஜ் (38). இவர் தமிழக வெற்றி கழகத்தின் செஞ்சி தெற்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினராகவும், பல்லாவரத்தில் உள்ள தனியார் வங்கியிலும் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.

இன்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜெகன் ராஜை கட்டுவிரியன் பாம்பு கடித்துள்ளது. உடனடியாக, அவரை குடும்பத்தினர் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெகன் ராஜ் உயிரிழந்தார்.

இதையடுத்து, உயிரிழந்த ஜெகன் ராஜின் தம்பி மற்றும் உறவினர்கள், அங்குப் பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களைச் சூழ்ந்துகொண்டு சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர். கடித்த பாம்பின் புகைப்படத்தை காண்பித்தும், “அறிகுறிகள் தெரிந்தால் தான் சிகிச்சை தருவோம்” எனக் கூறி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிகிச்சை அளிக்காமல் தாமதப்படுத்தியதாகவும், அவசர காலத்திற்கு வைக்கப்பட்ட ஆக்ஸிஜன் தீர்ந்த பிறகு மாற்று சிலிண்டர் வைக்க அரை மணி நேரத்திற்கு மேல் காலதாமதம் செய்ததாகவும் குற்றம்சாட்டினர்.

இறந்த ஜெகன் ராஜ்ஜியின் சகோதரர்கள் கேட்கின்ற கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் மருத்துவப் பணியாளர்கள் அலட்சியமாக இருந்தனர். இனிவரும் காலங்களில் இதுபோன்று அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் எந்தவொரு உயிரும் பிரியக்கூடாது என்றும், தவறிழைத்த ஊழியர்கள் மீது அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள் ; லஷ்மிகாந்தன் எதிரொலி / 8939476777
