விருதுநகர் மாவட்டம், கூமாபட்டியில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கி வேறொரு பெண்ணை திருமணம் செய்த இளைஞரை 6 ஆண்டுகள் கழித்து போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே, கூமாபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமசாமியாபுரம் பகுதியை சேர்ந்த சேர்வாரன் என்பவரது மகள் ஈஸ்வரியும் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் காதலித்துள்ளனர். ஈஸ்வரி வீட்டார் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் ஈஸ்வரியை கடந்த 2019 ம் ஆண்டு வேறொரு நபருக்கு திருமணம் முடித்து வைத்தனர்.

திருமணமாகிய ஒரே நாளில் அவருடன் வாழ மறுத்து ஈஸ்வரி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். இதையடுத்து ராஜ்குமார் ஈஸ்வரியுடன் மீண்டும் காதலை தொடர்ந்தார். ஈஸ்வரியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் ராஜ்குமார் தனிமையில் இருந்தார். இவர்களது காதல் அனைவருக்கும் தெரியவர ஈஸ்வரி தனது பெற்றோரின் சம்மதத்தை பெற்று குடும்பத்துடன் சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு ராஜ்குமாரிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், ராஜ்குமார் மறுத்ததுடன் வேறொரு பெண்ணை திருமணம் செய்தார். இது ஈஸ்வரிக்கு தெரிந்தவுடன் அதை தாங்கிக்கொள்ள முடியாமல் ஈஸ்வரி 2019 ம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது தந்தை சேர்வாரன் அளித்த புகாரின் அடிப்படையில், சந்தேக மரணமாக கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரேத பரிசோதனையில் ஈஸ்வரி 4 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஆர்.டி.ஒ விசாரணை நடத்தப்பட்டதுடன், சிசுவின் மரபணு மற்றும் ராஜ்குமாரின் மரபணு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. 6 ஆண்டுகளுக்குப் பின் அதன் முடிவு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கூமாப்பட்டி போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதில் சிசுவின் மரபணு ராஜ்குமார் உடையது என தெரிவிக்கப்பட்டது. எனவே ஈஸ்வரியின் கர்ப்பத்திற்கு ராஜ்குமார் தான் காரணம் என உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில்
சந்தேக மரண வழக்கை தற்கொலைக்கு தூண்டியது, ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியது ஆகிய பிரிவுகளாக மாற்றி இருவேறு பிரிவுகளின் கீழ் ராஜ்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

எஸ்.பி கௌதம் கோயல் உத்தரவின் பேரில், ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி பாலசுந்தரம் ஆலோசனைப்படி, கூமாபட்டி காவல் ஆய்வாளர் சங்கர் தலைமையிலான போலீசார்
ராஜ்குமாரை கைது செய்தனர். இச்சம்பவத்தில் 6 ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகள் ; கண்ணன் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed