சிறப்பு தகுதித் தேர்வில் பணிமூப்பு மற்றும் கற்பித்தல் செய்முறைக்கு மதிப்பெண் வழங்கி, அனைத்து ஆசிரியர்களையும் தேர்ச்சி பெற வைக்க வேண்டும்: 

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில், அதன் நிறுவனத் தலைவர், சா.அருணன் அவர்கள் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார் அதில்,

சென்ற ஆண்டு உச்ச நீதிமன்றம், பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) எழுதித் தேர்ச்சி பெற வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது, ஓய்வு பெற ஐந்து ஆண்டுகளுக்குள் உள்ள ஆசிரியர்களுக்குத் தேர்வில் இருந்து விலக்களித்துள்ளது. அதேநேரம், ஓய்வு பெற ஐந்து ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்கள் பணியில் தொடர வேண்டுமானால், மூன்று ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்; அப்படித் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணியைத் தொடர முடியும் என்று தீர்ப்பு வழங்கி ஆசிரியர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் அழைத்து அரசிடம் கருத்து கேட்கப்பட்டது. அதிலே ஒட்டுமொத்த ஆசிரியர் சங்கங்களும் 2011ஆம் ஆண்டிற்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்கக் கேட்டுக்கொண்டோம். மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்துச் சீராய்வு மனுத் தாக்கல் செய்யவும் கேட்டுக்கொண்டோம். அப்படியும் தீர்ப்பு வேறுவிதமாக வரும் பட்சத்தில், அனைத்து ஆசிரியர்களையும் கைவிடாமல் அனைவரும் பணியில் தொடரும் வகையில் சிறப்புத் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்றும், மற்ற மாநிலங்கள் இத்தகைய சூழலை எவ்வாறு கையாளுகின்றன என்பதை எல்லாம் எடுத்துரைத்தோம்.

சமூக நீதி அடிப்படையிலும் இடஒதுக்கீடு அடிப்படையிலும் தேர்ச்சி மதிப்பெண்ணை அறிவிக்கக் கேட்டுக்கொண்டோம்.
அதன் அடிப்படையில், வேலை தேடும் தேர்வர்களுக்காக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் சமூக நீதியைக் கடைப்பிடித்து, அதனடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. இத்தேர்வில் தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களும் எழுதினர். இதில், பணிபுரியும் பெரும்பாலான ஆசிரியர்கள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், ஏற்கனவே பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்குச் சிறப்புத் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைத்தோம். அந்தக் கோரிக்கையில், பணிமூப்பிற்கு (Seniority) மதிப்பெண்ணும், பாடம் நடத்தும் தன்மைக்குச் செய்முறை (Practical) மதிப்பெண்ணும் வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

மேலும், அவர்கள் கற்பிக்கும் பாடப் பிரிவிலிருந்தே 80 விழுக்காடு கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்றும் கோரியிருந்தோம். இது வேலை தேடுபவர்களுக்கான தேர்வு இல்லை என்பதால், இதில் இடஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கான தேர்வு என்பதால், ஒரே சராசரியான மதிப்பெண்ணை வழங்கி அனைத்து ஆசிரியர்களையும் தேர்ச்சி அடையச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டோம்.

இச்சூழலில், சென்ற 4ஆம் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாளும், 5ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வும் நடைபெற்றன. இந்தத் தேர்வு நாங்கள் கோரிக்கை வைத்ததற்கு முற்றிலும் மாறாக இருந்தது. முழுக்க முழுக்க வேலை தேடும் தேர்வர்களுக்கு நடத்தப்பட்ட தேர்வை விட மிகக் கடினமாக இருந்தது. 12ஆம் வகுப்பு மாணவர்களைக் கையாளும் ஆசிரியர்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் இதில் கேட்கப்பட்டிருந்தன. இடைநிலை ஆசிரியர்கள் 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரையிலும் உள்ள மாணவர்களைக் கையாளுபவர்கள் என்பதை வினாத்தாள் வடிவமைப்பாளர்கள் அறியாமல் வடிவமைத்துள்ளனர்.

இருபது ஆண்டுகளாக ஒரே பாடத்தைப் பயிற்றுவித்து வரும் ஆசிரியர்கள் எப்படி இது போன்ற வினாக்களுக்கு விடையளிக்க முடியும்? இது எப்படி இருக்கிறது என்றால், தொடர்ந்து பயிற்சியில் இருக்கும் இளைஞர்களுக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஒரு குறிப்பிட்ட வினாடிக்குள் இலக்கை அடைய வேண்டும் என்று நேரத்தை நிர்ணயம் செய்து, அந்த இலக்கை அடைந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற விதியை ஏற்படுத்திப் போட்டியை நடத்துவது போன்றதாகும். அது இளைஞர்களுக்குச் சாத்தியம். ஆனால், அதே போன்ற விதியை நிர்ணயம் செய்து, 50 வயதிற்கு மேல் உள்ளவர்களையும், தொடர் பயிற்சியில் உள்ள இளைஞர்களுக்கு நிர்ணயித்த அதே வினாடிக்குள் ஓடி முடிக்க வேண்டும்; அப்படி ஓடி முடித்தால்தான் வெற்றி பெற முடியும் என்று சொல்வதைப் போன்றுதான் இப்போது நடந்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கிறது. இதனை வினாத்தாள் வடிவமைப்பாளர்கள் ஏன் உணரவில்லை?

எனவே, ஏற்கனவே அனைத்து ஆசிரியர் சங்கங்களும் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், சராசரியாக 40 விழுக்காடு மதிப்பெண்ணைத் தேர்ச்சி மதிப்பெண்ணாக நிர்ணயம் செய்ய வேண்டும். அதில் 20 விழுக்காடு மதிப்பெண்ணைப் பணிமூப்பு மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் செய்முறைக்காக வழங்கி, தேர்வு எழுதிய ஆசிரியர்கள் அனைவரையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்களையும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு ஆ.ராஜ்மோகன் அவர்களையும், பள்ளிக்கல்விச் செயலாளர் மதிப்புமிகு சந்திரமோகன் அவர்களையும், பள்ளிக்கல்வி இயக்குநர் மதிப்புமிகு முனைவர் ச.கண்ணப்பன் அவர்களையும், தொடக்கக்கல்வி இயக்குநர் மதிப்புமிகு முனைவர் மூ.ஆ.நரேஷ் அவர்களையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். என அந்த கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.

செய்திகள் ; லெனின் லோகேஷ் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed