மதுரை பைபாஸ் ரோடு, நேரு நகர் பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள தனீஷ் ஜுவல்லரி நகைக்கடையில் 42 கிலோ தங்க நகைகள் திருடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகரின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான பைபாஸ் ரோடு நேரு நகர் பகுதியில் அமைந்துள்ள இந்த நகைக்கடை, திறக்கப்பட்டு சில நாட்களே ஆகிறது. மேலும், கடையின் கட்டிடப் பணிகளும் இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில் இருந்துள்ளது. இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், கடையின் உள்ளே புகுந்து சுமார் 42 கிலோ எடையுள்ள தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கட்டிடப் பணிகள் முழுமையடையாத சூழலில், பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி மர்ம நபர்கள் உள்ளே புகுந்தது எப்படி? கண்காணிப்பு கேமராக்களில் (CCTV) பதிவாகியுள்ள காட்சிகள் என்ன? என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மதுரை மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன், குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதிதாகத் திறக்கப்பட்டு, முழுமையான கட்டிடப் பணிகள் கூட நிறைவடையாத நிலையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள பிரபல நகைக்கடையில் நடைபெற்றுள்ள இந்த துணிகரத் திருட்டுச் சம்பவம், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777
