ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது :
2026-ஆம் ஆண்டு கோடை மழையின் காரணமாக பொது மக்கள் எதிர்பாராத இடி மின்னல் போன்றவற்றின் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவும், விழிப்புடன் இருக்கவும், இடி மின்னல் வரும் நேரங்களில் பொதுமக்கள் செயல்பட வேண்டியவை குறித்தும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவ மா.சிவகுரு பிரபாகரனால் கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகிறது :
மின்னல் நேரத்தில் செய்ய வேண்டியவை,செய்யக்கூடாதவை :
1.உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள் :
இடி சத்தம் கேட்டவுடன் வெளிப்புற செயல்பாடுகைள உடனே நிறுத்தவும். உடனடியாக ஒரு பாதுகாப்பான கட்டிடம் அல்லது மூடப்பட்ட வாகனத்திற்குச் செல்லுங்கள். வயல்கள், படகுகள், கூரைகள் , பிற திறந்த பகுதிகளை விட்டு விலகுங்கள். குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பிணிப் பெண்கள் , மாற்றுத்திறனாளிகளை பாதுகாப்பான இடத்தற்குள் அழைத்து செல்லவும். இறுதி இடி முழக்கத்திலிருந்து 30 நிமிடங்கள் ஆகும் வரை வீட்டிற்குள் இருங்கள்.
2. ஆபத்தான இடங்களிலிருந்து விலகி இருங்கள் :
மரத்தின் அடியில் அல்லது அருகில் நிற்க வேண்டாம். பேருந்து நிறுத்தங்கள், கொட்டகைகள், தகரக் கூரை அமைப்புகள் , பிற திறந்தவெளி கூடாரங்களைத் தவிர்க்கவும், திறந்த வெளிகள், கடற்கரைகள், மலை உச்சி , ஆற்றங்கரைகள் ஆகியவற்றிலிருந்து விலகி இருக்கவும். நீர் நிலைகளிலிருந்து விலகி இருக்கவும். உலோக வேலிகள், கம்பங்கள், கம்பிகளிலிருந்து விலகி இருக்கவும், வாயில்கள் , மின் கம்பிகளிலிருந்து விலகி இருக்கவும். திறந்த வெளியில் இருப்பதை தவிர்க்கவும்.
3.உங்களால் தங்குமிடத்தை அடைய முடியாவிட்டால் :
தங்குமிடம் கிடைக்காவிட்டால், கால்களை ஒன்றாக வைத்து குனிந்து அமருங்கள். தரையை தொடுவதை தவிர்க்கவும். தரையில் மல்லாந்து படுக்காதீர்கள். கைகளைத் தரையில் வைக்காதீர்கள். குழுவாக இருந்தால், இடைவெளி விட்டு நில்லுங்கள்.
4.வீட்டிற்குள் பாதுகாப்பாக இருங்கள் :
ஜன்னல், கதவு, பால்கனி , வரண்டா அருகில் நிற்பதை தவிர்க்கவும். குழாய்கள், ஷவர்கள் அல்லது பிற நீர்க்குழாய் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம். மின் சாதனங்களின் மின் இணைப்பைத் துண்டிக்கவும். செல்லப்பிராணிகளை வீட்டுக்குள் உலோகச் சங்கிலியால் கட்டுவதை தவிர்க்கவும். வாகனத்தில் இருந்தால், ஜன்னல்களை மூடிவிட்டு உள்ளேயே இருங்கள்.
5.மின்னல் தாக்கிய ஒருவருக்கு உதவுவது எப்படி :
மின்னல் தாக்கியவரிடம் மின்சாரம் இருக்காது அவரைத் தொடுவது பாதுகாப்பானது. அவரைப் பாதுகாப்பான, உலர்ந்த இடத்திற்குக் கொண்டு செல்லவும், சுவாசம் , நாடித்துடிப்பைச் சரி பார்க்கவும், அந்த நபர் சுவாசிக்கவில்லை என்றால், அவருக்கு சிபிஆர் செய்யத் தொடங்குங்கள், அவசர மருத்துவ சேவைகளை உடனடியாக அழைக்கவும்.
6.தயாராக இருங்கள் :
அதிகாரப்பூர்வ வானிலை எச்சரிக்கைகளையும், மொபைல் செயலியையும் பின்பற்றவும். இடியுடன் கூடிய மழை பெய்யும் என முன்னறிவிப்பு இருக்கும்போது வெளிப்புறப் பணிகளைத் தவிர்க்கவும். கால்நடைகளையும், கோழிகளையும் பாதுகாப்பான கொட்டகைகளுக்கு இடமாற்றம் செய்யவும். வீடுகளைச் சுற்றியுள்ள பலவீனமான கிளைகளையும், மரங்களையும் வெட்டி ஒழுங்குபடுத்தவும்.
7. இடி,மின்னலுக்கு பிறகு கவனமாக இருங்கள் :
அறுந்து விழுந்த மின்கம்பிகளையும்,சேதமடைந்த மின் கம்பங்களையும் கவனிக்கவும், ஆபத்துகளை உடனடியாகத் தெரிவிக்கவும். மின் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு முன் அவற்றைச் சரிபார்க்கவும், வானிலை நிலவரங்களைத் தொடர்ந்து கவனிக்கவும். இவ்வறிவுரைகளை தவறாது பின்பற்றி பொதுமக்கள் பாதுகாப்பாக செயல்படுமாறு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
