காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோற்சவத்தின் போது, வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் தள்ளுமுள்ளுவாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உலகப் பிரசித்தி பெற்ற தேவராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த மே 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவ நாட்களில், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் வரதராஜ பெருமாள், பெரிய காஞ்சிபுரம் கங்கைகொண்டான் மண்டபத்தில் மண்டகப்படி கண்டருளி, அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் ராஜவீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

பிரம்மோற்சவ காலங்களில் நடைபெறும் வீதியுலாவின் போது, தென்கலை பிரிவு ஐயங்கார்கள் சுவாமியின் முன்புறமாக திவ்ய பிரபந்தம் பாடிச் செல்லவும், வடகலை பிரிவு ஐயங்கார்கள் சுவாமியின் பின்புறமாக வேத பாராயணம் செய்து செல்லவும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், பிரம்மோற்சவத்தின் நான்காம் நாள் உற்சவமாக சந்திரபிரபை வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாள் எழுந்தருளிய வீதியுலா நடைபெற்றது. அப்போது கங்கைகொண்டான் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளியிருந்த நேரத்தில், திவ்ய பிரபந்தம் பாடிய தென்கலை பிரிவினரும், வேத பாராயணம் செய்து வந்த வடகலை பிரிவினரும் இடையே கோஷ்டி மரியாதை, பாடல் பாராயணம் மற்றும் உற்சவ நடைமுறைகள் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கருத்து வேறுபாடு வாக்குவாதமாக மாறி, பின்னர் தள்ளுமுள்ளு சம்பவம் ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


தகவலறிந்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினர்.
இந்த சம்பவத்தால் வீதியுலாவைக் காணவும், சுவாமி தரிசனம் செய்யவும் வந்த பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர். பிரம்மோற்சவம் போன்ற முக்கிய மத நிகழ்வுகள் அமைதியாகவும், பக்தி நிறைந்த சூழலிலும் நடைபெறுவதற்கு சம்பந்தப்பட்ட துறைகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


செய்திகள் ; லட்சுமி காந்தன் எதிரொலி / 8939476777
