கிருஷ்ணகிரி தி விஜய் மில்லினியம் சிபிஎஸ்இ பள்ளி (The Vijay Millennium CBSE School) வளாகத்தில், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் உடல் நலம் பேணுதலை வலியுறுத்தி “SAY NO TO DRUGS, PROMOTE FITNESS” என்ற உன்னத நோக்கத்துடன் ‘Drug Free District Cricket Tournament’ கிரிக்கெட் போட்டி மற்றும் விழிப்புணர்வு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இப்போட்டியானது ஜேசிஐ கிருஷ்ணகிரி மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான தொடராகும்.
இவ்விழாவிற்கு ஜேசிஐ கிருஷ்ணகிரி அமைப்பின் தலைவர் JFP கோகுல் சின்னசாமி தலைமை தாங்கி, வரவேற்புரையாற்றினார். அவர் தனது உரையில், வருகை தந்திருந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களையும், ஜேசிஐ கிரிக்கெட் அணிகளையும் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்களையும் அன்போடு வரவேற்றார்.

விழாவின் முதன்மை விருந்தினராகப் பங்கேற்ற தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் திரு. மணிமாறன் அவர்கள், அனைத்து சிறப்பு விருந்தினர்களுடன் இணைந்து பாரம்பரிய முறைப்படி குத்துவிளக்கேற்றி இந்த விளையாட்டுப் போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார்.

ஆய்வாளர் மணிமாறன் அவர்களின் விழிப்புணர்வு உரை:

“இன்றைய இளைய தலைமுறையினரே, நீங்கள் தான் இந்த நாட்டின் தூண்கள்! எனவே, கற்பனை உலகிலும், போதை போன்ற தவறான பழக்கங்களிலும் மூழ்கி உங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொள்ளாதீர்கள். ‘போதைப்பொருட்களுக்கு நோ (NO) சொல்லுங்கள்’. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள், மனதை நல்வழியில் செலுத்துங்கள். அப்போதுதான் உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறும்.”

விழாத் தலைவர் JFP கோகுல் சின்னசாமி அவர்கள் மேடையில் ஆற்றிய எழுச்சி உரை இளைஞர்களைக் கவர்ந்தது:

“தற்காலத்தில் நாம் நம்முடைய பாரம்பரிய வாழ்வியலை மறந்து வருகிறோம். திருமணம், பிறந்தநாள் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கூட மது மற்றும் போதை கலாச்சாரம் ஊடுருவியிருப்பது வேதனை அளிக்கிறது. இந்த நாடகக் கலாச்சாரத்தை நாம் மாற்ற வேண்டும். மாற்றுச் சிந்தனைகளைக் கையாண்டு, உங்களது பொன்னான நேரத்தை முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கும், உண்மையாகவே உதவி தேவைப்படும் ஏழை எளிய மக்களுக்கும் செலவிடுங்கள்.
உலகையே மாற்றும் பேராற்றல் நம் இளைஞர்களிடம் உள்ளது. உங்கள் எண்ணங்களை உயரமாக வையுங்கள்; போதைக்கு அடிமையாகி உங்கள் உடல்நலத்தையும், செல்வத்தையும் அழித்துக் கொள்ளாதீர்கள். ‘போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை’ உருவாக்க அனைவரும் கரம் கோர்ப்போம். தமிழ்ப் பண்பாட்டைப் போற்றிப் பின்பற்றுவோம்.

விறுவிறுப்பாக நடைபெற்ற கிரிக்கெட் போட்டி: பரிசுகளை அள்ளிச்சென்ற அணிகள்.
“போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்” என்ற உன்னத நோக்கத்துடன் நடைபெற்ற இந்த மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில், பங்கேற்ற அனைத்து அணிகளும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. இறுதிப் போட்டிகளின் முடிவில் வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுகளும் சுழற்கோப்பைகளும் வழங்கப்பட்டன.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்த கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தையும், முதல் பரிசையும் எம்எம்எம் எண்டர்பிரைசஸ் அணி தட்டிச் சென்றது. இறுதிப் போட்டி வரை மிகக் கடுமையான சவாலை அளித்து, விறுவிறுப்பாக விளையாடிய ஜேசிஐ கிருஷ்ணகிரி அணி இரண்டாம் பரிசினைப் பெற்றது. திறமையாக விளையாடி இறுதிச் சுற்றில் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொண்ட குணம் மருத்துவமனை ஓசூர் அணி மூன்றாம் பரிசினைத் தன்வசப்படுத்தியது.

இவ்விழாவில் குணம் மருத்துவமனையின் நிறுவனர் திரு. ஜோகர், ஏஞ்சல் ஒன் மற்றும் எம்எம்எம் எண்டர்பிரைசஸ் நிறுவனர் திரு. அப்பாத்துரை, தி விஜய் மில்லினியம் பள்ளியின் முதல்வர் மற்றும் ஜேசிஐ அமைப்பின் முக்கியப் பிரமுகரான திரு. ஏழுமலை (Zone 16) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
விழாவின் வழிகாட்டி JFM கந்தன் (தலைவர் – JCOM L கிருஷ்ணகிரி 1.0) அவர்கள் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்குப் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.

இறுதியாக, இந்த விளையாட்டுப் போட்டி விழாவினை மிகச் சிறப்பான முறையில் திட்டமிட்டு, வெற்றிகரமாக நடத்திய விழாத் தலைவர் (Event Chairman) JFD தனசேகர் அவர்கள், நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பித்த முதன்மை விருந்தினர்கள், விளையாட்டு வீரர்கள், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் போட்டி சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *