பொன்னேரியில் உள்ள ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், டி.ஜே.எஸ் கல்வி குழுமம் மற்றும் மக்கள் நலப்பணி இயக்க அறக்கட்டளையின் சார்பில், ஏகலைவன் கட்டணமில்லா டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையம் இயங்கி வருகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறும் இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற பலர் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு நடத்தி வரக்கூடிய போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

அதில் குறிப்பாக, சாருமதி என்ற மாணவி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று சென்னை குரளகத்தில் பணி நியமனம் பெற்றார். பின்னர் அதனை அடுத்து குரூப் 2 தேர்விலும் தேர்ச்சி பெற்று, பின்னர் தலைமைச் செயலகத்தில் பணி நியமனம் செய்யப்பட்டார். அதேபோல், ஜோதி நகர் பகுதியில் சேர்ந்த, கவுதம் என்ற இளைஞர் ஒன்றிய அரசு நிர்வாகத்தின் கீழ் நடைபெற கூடிய எல்லைக்காவல் பாதுகாப்பு படை பிரிவின் சார்பில் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

அதேபோல், வன்னிப்பாக்கம் பகுதியை சேர்ந்த பிரியா என்பவர் சென்ற ஆண்டு நடைபெற்ற, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வில் வெற்றி பெற்று இருந்தார். பின்னர் அதனை தொடர்ந்து, சப் இன்ஸ்பெக்டர் பதவிக்காக நடைபெற்ற தேர்விலும் வெற்றி பெற்றிருக்கிறார்.
அதேபோல், அனுப்பம்பட்டு பகுதியை சேர்ந்த எழிலரசி என்பவர் சென்ற ஆண்டு நடைபெற்ற குரூப் 2 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறார். மேலும் சென்ற ஆண்டு நடைபெற்ற, தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் இடைநிலை (தாள்-1) மற்றும் பட்டதாரி (தாள்-2) ஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தும் தகுதி தேர்வான டெட் (TNTET) தேர்வில், ஏகலைவன் பயிற்சி மையத்தில் படித்த 8 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த போட்டி தேர்வுகளில் எல்லாம் வெற்றி பெற்றவர்களை பாராட்டி கௌரவப்படுத்த வேண்டி, பொன்னேரி ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில், அந்த கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழா நிகழ்ச்சியில், கல்லூரியின் செயலாளர் ரமேஷ் அவர்களும், ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் தாளாளர் பச்சையப்பன் அவர்களும், நர்சிங் கல்லூரியின் தாளாளர் ராமா அவர்களும், ஸ்ரீதேவி கல்லூரியின் முதல்வர் மரியம் லியோனி பமிலா அவர்களும் அரசு போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

முன்னதாக, ஏகலைவன் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தின் பயிற்சி ஆசிரியர் கோகுல்நாத் ராஜு அவர்களும், டெட் தெர்வில் தேர்ச்சி அடைந்த, ஞாயிறு அரசு பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக பணியாற்ற கூடிய ஜான்சி அவர்களும் கல்லூரி மாணவிகளுக்கு டிஎன்பிஎஸ்சி பயிற்சி குறித்த ஆர்வத்தை வழங்கும் வகையில் விழிப்புணர்வையும், தேர்வை எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகளை பற்றியும் எடுத்துரைத்தனர்.

மாணவர்களிடையே பேசிய, பயிற்சி ஆசிரியர் கோகுல்நாத் ராஜு கூறுகையில் ; மாணவ, மாணவிகள் கல்லூரி முதலாம் ஆண்டு துவக்கத்தில் இருந்து, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக நேரம் ஒதுக்கி படித்தால், அவர்கள் கல்லூரி படிப்பை முடித்த அடுத்த ஆண்டு அவர்கள் எழுதும் தேர்வில், கண்டிப்பாக அவர்களுடைய வெற்றி நிச்சயம் எனவும், போட்டி தேர்வுகள் எழுத வேண்டும் என்பவர்கள் முயற்சி செய்தால் மட்டும் போதாது பயிற்சி இருந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம் என கூறினார்.

அதேபோல், ஜான்சி அவர்கள் பேசுகையில் ; நமது பயிற்சி ஆசிரியர் சொன்னது போல், முயற்சி மட்டும் போதாது, பயிற்சியுடன் முயற்சி செய்தால் தான் வெற்றி பெற முடியும், நான் திருமணத்திற்கு பிறகு, குடும்ப சூழல் காரணமாக, நீண்ட இடைவேளையாக பல ஆண்டுகளுக்கு பின், கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து பயிற்சியுடன், முயற்சி செய்ததால் தான், என்னுடைய 53 வது வயதில், டெட் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கிறேன். நீண்ட இடைவெளிக்கு பிறகும், பயிற்சியுடன் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்பதற்கு நானே உதாரணம், ஆனால் தற்போது கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் உங்களால் முடியாதா? என, மாணவிகளை நோக்கி கேள்வி கேட்டு, அறிவுரை வழங்கி பேசினார்.
செய்திகள் : லோகநாதன் / பொன்னேரி / எதிரொலி / 8939476777
