தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் மிகவும் பரபரப்பாக தங்கள் கட்சி பணிகளை கவனித்து கொண்டு இருக்கக்கூடிய சூழல் நிலவி வருகிறது. சில கட்சிகள் கூட்டணி பேசி முடித்து தங்களுடைய கூட்டணியை உறுதிப்படுத்தி விட்டு, பிரச்சாரத்தை கிட்டத்தட்ட துவக்கி விட்ட நிலையில், தமிழ்நாட்டு அரசியலில் எப்போதும் பேரம் பேசும் அரசியல் செய்து கொண்டிருக்கும் தேமுதிக இந்த தேர்தலிலும் அதே போல், கூட்டணி பேச்சு வார்த்தையை இழுபறி நிலையில் வைத்து கொண்டே, ” தங்கள் கட்சியின் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம்,” என அறிவித்திருந்தது.

தேமுதிக கட்சி உருவான காலத்தில் இருந்து அந்த கட்சி நிர்வாகிகளையும், அந்த கட்சி தொண்டர்களையும் வைத்து வியாபார நோக்கத்திலேயே ஒவ்வொரு தேர்தலையும் சந்தித்து வருவதால், விரக்தியில் இருக்கும் அந்த கட்சி நிர்வாகிகள் தங்கள் கட்சி எந்த கட்சியில் கூட்டணி சேரும், எந்தெந்த தொகுதியை வாங்குவார்கள் என்பது கூட தெரியாமல் விழி பிதுங்கி குழப்பத்தில் இருக்கும் சூழ்நிலையில், தலைமை விருப்பமுனு தாக்கல் செய்ய சொன்னதால், பெரும்பாலான நிர்வாகிகள் விருப்பமனு செய்ய விரும்புபவர்கள் கூட, குழப்பத்தில் தயங்கி விருப்ப மனு செய்யாத சூழ்நிலை இருந்தது. அதனால், அந்த கட்சி விருப்பமனு செய்ய வேண்டிய நான்காவது நாள் கூட அக்கட்சியின் தலைமை அலுவலகம் வெறிச்சோடி பொய் கிடந்தது. அதை குறிப்பிட்டு பல பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.


இந்நிலையில், அந்த கட்சியின் சென்னை மேற்கு மாவட்டம் சார்பில், பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பிரேமலதா, சுதீஷ் உட்பட அனைவரும் மேடையில் அமர்ந்திருக்கும் போது, விருகம்பாக்கம் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர் மாரி என்பவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கோபத்தில் பத்திரிகையாளர்களை மிரட்டும் தோரணையில், பத்திரிகையாளர்கள் அனைவரையும் நான் வீடு புகுந்து அடிப்பேன், நான் கட்சிக்காக 3 முறை சிறை சென்று இருக்கிறேன். பத்திரிகையாளர்களை நான் ஏற்கனவே கூட அடித்து இருக்கிறேன், எனக்கு சிறை செல்வது ஒன்றும் புதிதில்லை, என ஆவேசமாக பேசிவிட்டு, நன்றி வணக்கம்! என கூறி பேச்சை முடித்து கொண்டு சென்று விட்டார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த பிரேமலதாவோ, சுதீஷோ யாரும் மாரியின் பேச்சை கண்டிக்கவில்லை.

தேமுதிக நிர்வாகி கட்சி தலைவரின் முன்னிலையில் இப்படி பேசியதை, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் கடுமையாக கண்டித்துள்ளார். அவர் வெளியிட்ட கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது ; பொது மேடையில் கட்சியின் பொது செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த், கட்சியின் பொருளாளர் மட்டுமன்றி கேப்டன் தொலைக்காட்சி என்ற ஊடகத்தை நடத்தி வரும் திரு எல்.கே.சுதீஷ் ஆகியோரின் முன்னிலையில்,

ஒரு நிர்வாகி, “பத்திரிகையாளர்களை வீடு புகுந்து அடிப்போம் ” என்று பேசி இருப்பது கண்டிக்கத்தக்க செயலாகும் ! அரசியல் மட்டுமன்றி எல்லா தரப்பிலும் ஒருசிலர் தவறான நபர்கள் இருப்பது இயல்பான ஒன்றுதான் ! பத்திரிகை துறையில் கூட ஒரு சிலர் உள்நோக்கம் கொண்டு உங்களை விமர்சித்து இருக்கலாம், அவர்களை யார் என்று அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் பொது மேடையில் இப்படி ரவுடித்தனமாக பேசுவது ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் சீண்டுவதாகும் !

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திரு பார்த்தசாரதி போன்ற பலர் நல் மதிப்பு பெற்றவர்கள் கேப்டன் கட்சியில் உள்ள நிலையில், இப்படி பொது தளத்தில் கட்சியின் குண்டர்கள் பேசுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். கட்சியின் தலைமை இது போன்றவர்களின் பேச்சை கைதட்டி ரசிப்பதை தவிர்த்து, கட்டுப்படுத்த வேண்டும். இதே நிலை தொடர்ந்தால், இதற்கான எதிர்வினை வரும் தேர்தலில் பிரதிபலிக்கும் ! என கூறியிருக்கிறார்.
P.G.பாலகிருஷ்ணன் எதிரொலி / 8939476777
