பத்திரப்பதிவு அலுவலர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக வாக்குமூலம்…

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில், அனைத்து அரசு அலுவலகங்களிலும் பாதுகாப்பும், கட்டுப்பாடும் இல்லாத நிலையை வெளிப்படுத்தும் விதமாக, அரசியல்வாதி ஒருவர், ஒரு அரசு அலுவலகத்தில் நுழைந்து அட்டகாசம் செய்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடகால் பகுதியைச் சேர்ந்தவர் குப்பன், இவர் திமுக கட்சியின் மூத்த நிர்வாகியாவர், இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதீத மது போதையில் ஸ்ரீபெரும்புதூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் வந்துள்ளார்.

அப்போது அலுவலகத்தில் பத்திரப்பதிவு அலுவலர் இல்லாததால் ஆவேசமடைந்த குப்பன், அலுவலரின் நாற்காலியில் அமர்ந்து, காலை தூக்கி டேபிள் மீது வைத்து கொண்டு, நான் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தும், இன்னும் என்னிடம் டாக்குமெண்ட் வழங்கவில்லை, ஏன்? எனவும், இந்த அலுவலகத்தில் இனி யாரையும் நம்பி லஞ்சம் கொடுக்க முடியாது. ஆகவே, யாரும் லஞ்சம் கொடுக்காதீங்க, எனவும் கூறிக்கொண்டு அலுவலகம் முழுவதும் கூச்சலிட்டு அட்ராசிட்டி செய்துள்ளார்.

இந்த சம்பவம் அலுவலகத்திற்குள் இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள், பொதுமக்கள் என அனைவரின் முன்னிலையில், அரை மணி நேரத்திற்கு மேலாக நடந்துள்ளது. ஒரு அரசு அலுவலகத்தில் ஒரு அரசியல் நிர்வாகி, மதுபோதையில், உயர் அலுவலரின் இருக்கையில் அமர்ந்து கொண்டு அட்டகாசம் செய்த காட்சிகள் வீடியோவில் தெளிவாக பதிவாகி உள்ளது.

இந்த சூழ்நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல், குப்பனை எப்படி வெளியேற்றுவது என தெரியாமல் அதிகாரிகளும், அலுவலக பணியாளர்களும் திகைத்து நின்ற நிலையில், ஒரு சிலர் துணிச்சலுடன் முன்வந்து, அவரை தாஜா செய்து நாற்காலியில் இருந்து இறக்கி பின்னர், அலுவலகத்தில் உள்ளே இருந்து வெளியேற்றியுள்ளனர்.

இதுபோன்ற விரும்பதகாத சம்பவம் நடந்த போதும், ஸ்ரீபெரும்புதூர் பத்திரப்பதிவு அலுவலகம் சார்பில் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து, எந்தவித புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்பது பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அரசு அலுவலகத்தில் வெளிப்படையாக லஞ்சம் வாங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டும், அது உறுதியாகும் வகையில், ஒருவர் மதுபோதையில் அராஜகமாக உள்ளே நுழைந்து அட்டகாசம் செய்த பின்னரும், இது லஞ்ச விவகாரத்தை மூடி மறைப்பதற்கான முயற்சியா?
அல்லது அரசியல் செல்வாக்கால் நடவடிக்கை எடுக்கப்படவில்லையா?
என்ற கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதற்கிடையே, நேற்றுமுன்தினம் அதே பத்திரப்பதிவு அலுவலகத்தில் கேமரா ஆபரேட்டராக பணிபுரியும் பெண் ஒருவர், குப்பன் தன்னை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக
ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வ புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அரசு அலுவலகத்தில் பணியாற்றும் பெண் பணியாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ள போதும், திமுக நிர்வாகி மீது இதுவரை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாதது அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கையும், அலுவலக ஊழியர்களின் பாதுகாப்பு எந்த அளவுக்கு புறக்கணிக்கப்படுகிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது.

ஒருபுறம் அரசு அலுவலகத்தில் மதுபோதையில் அட்டகாசம்,
மற்றொரு புறம் பெண் பணியாளருக்கு கொலை மிரட்டல், இரண்டுக்கும் ஆதாரமாக வீடியோவும், புகார் மனுவும் உள்ள நிலையில், மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும், எப்போதும் போல மௌனம் காப்பது, அரசு உயர் அதிகாரிகள் தன்னை தானே தரம் தாழ்த்தி கொள்ளும் ஒரு செயல் என, சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் புலம்புகின்றார்கள்.
மேலும், பெண் பணியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த, திமுக நிர்வாகி மீது உடனடியாக விசாரணை நடத்தி, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

P.G.பாலகிருஷ்ணன் / எதிரொலி / 893947677

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed