​
கடனை அடைக்காமல் மருத்துவமனைக்குச் செல்லக்கூடாது என மரக்கடை உரிமையாளர் தடுத்ததால், 9 மாத கர்ப்பிணி பெண்ணும் அவரது பச்சிளம் குழந்தையும் உரிய சிகிச்சையின்றி பரிதாபமாக உயிரிழந்த கொடூரம் காஞ்சிபுரம் அருகே நிகழ்ந்துள்ளது.

​காஞ்சிபுரம் மாவட்டம், சிங்காடிவாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (40). இவரது மனைவி தேன்மொழி (35). 9 மாத கர்ப்பிணியான இவர், தன் கணவருடன் அரக்கோணம் சாலையில் ‘வெள்ளை கேட்’ அருகே இயங்கி வரும் ஒரு ஆறுமுகம் என்பவரிடம் கடந்த 6 மாதங்களாகத் அங்கங்கேயே தங்கி மரம் வெட்டும் வேலை செய்து வந்துள்ளனர். இவர்களுடன் முத்து – காவியா என்ற மற்றொரு இருளர் தம்பதியும் இங்கு வேலை செய்து வருகின்றனர்.

வேலைக்காக மரக்கடை உரிமையாளர் ஆறுமுகத்திடம், ஆனந்தன் தம்பதியினர் ரூ. 20,000 கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த தேன்மொழிக்கு திடீரெனக் கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அலறியடித்த தம்பதியினர், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல அனுமதிக்குமாறு ஆறுமுகத்திடம் வேண்டியுள்ளனர். ஆனால், “வாங்கிய கடனைக் கொடுக்காமல் மரம் வெட்டும் இடத்தில் இருந்து செல்லக் கூடாது” எனக் கூறி, அவர்களை மருத்துவமனைக்கு செல்லவிடாமல் ஆறுமுகம் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

​மருத்துவ உதவி கிடைக்காததால், தங்கியிருந்த கூடாரத்திலேயே தேன்மொழிக்கு நார்மல் டெலிவரி முறையில் பிரசவம் ஆகத் தொடங்கியது. அப்போது, குழந்தையின் உடல் பாதி வெளியே வந்த நிலையில், தீவிர வலி மற்றும் ரத்தப்போக்கால் துடித்த தேன்மொழியும், அவரது பச்சிளம் குழந்தையும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

​இன்று மாலை 4.00 மணியளவில் அங்கு வந்த உரிமையாளர் ஆறுமுகம், இந்தச் சம்பவத்தை வெளியே யாருக்கும் சொல்லக் கூடாது என்றும், பிரசவம் நடந்ததை மறைக்க வேண்டும் என்றும் கூறி, படிப்பறிவில்லாத அந்த இருளர் குடும்பத்தினரிடம் வெறும் ரூ. 2,000 பணத்தைக் கொடுத்து, உடலோடு சிங்காடிவாக்கம் இருளர் குடியிருப்புக்கு அனுப்பி வைத்துள்ளார்.

​பயந்துபோன இருளர் மக்கள், தேன்மொழி மற்றும் அரைகுறையாக இருந்த பச்சிளம் குழந்தையின் உடலோடு சடலத்தைக் இருளர் குடியிருப்புக்குக் கொண்டு வந்தனர். இக்கொடூர சம்பவம் குறித்து பழங்குடியின மக்களின் உரிமைக்காகச் செயல்படும் ‘மக்கள் மன்றம்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மகேஷ் அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

​

அவரது வழிகாட்டுதலின்படி, பொன்னேரிகரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் மனுவைப் பெற்றுக்கொண்டு விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கூலித் தொழிலாளியைக் கடனுக்காக மருத்துவமனைக்கு அனுப்பாமல் உயிரைப் பறித்த மரக்கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எஸ் சி எஸ் டி சட்டப்பிரிவு கீழும் கொத்தடிமை பிரிவின் கீழும் எப்ஐஆர் பதிவு செய்தால் மட்டுமே சடலத்தை வாங்குவோம் இல்லாவிட்டால் நாளையும் உள்ளுறுப்பு போராட்டம் நடத்துவோம் என இருளர் சமுதாய மக்கள் எச்சரிக்கை.


இது தொடர்பாக தேன்மொழியின் கணவர் ஆனந்தன் கூறும்போது, 20 ஆயிரம் ரூபாய் முன்பணம் வழங்கிவிட்டு எங்களை கொத்தடிமை போல ஆறுமுகம் நடத்துகிறார். ​எனது மனைவி தேன்மொழி கருவுற்று இருப்பதால் மருத்துவமனைக்கு சென்று பதிவு செய்ய வேண்டும் என்று பல முறை கேட்டும் அவர் மருத்துவமனைக்கு செல்ல அனுமதிக்கவில்லை.

​இந்நிலையில் நேற்று நாங்கள் விறகு வெட்டச் சென்றோம். மனைவி கர்ப்பிணியாக இருந்த காரணத்தினால் அவரை கொட்டகையில் விட்டு விட்டுச் சென்றேன். வேலை முடித்து மதியம் வீட்டிற்கு வந்த போது என் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

அதனால் கொஞ்சம் விளக்கெண்ணெய் மனைவியின் வயிற்றில் தடவி விட்டு, வேலை செய்யாமல் இருந்தால் மரக்கடை உரிமையாளர் ஆறுமுகம் அடிப்பார் என்ற பயத்தினால் வேலைக்கு மீண்டும் திரும்பினேன். மீண்டும் தண்ணீர் எடுக்க கொட்டகைக்கு வந்த போது என் மனைவி பிரசவ வலியால் துடித்துக் கொண்டு இருந்தார். குழந்தையின் கால்கள் முதலில் வெளியே வந்து, சில நொடிக்குள் எனது மனைவி பேச்சு மூச்சு இல்லாமல் போனார்.

நான் ஆறுமுகத்திற்கு போன் செய்தேன். பல முறை அழைத்தும் அவர் எடுக்கவில்லை. சுமார் 5 மணி அளவில் போனை அவர் எடுத்தபோது தகவலைச் சொல்லி அழுதேன். அதற்கு அவர், “செத்தா செத்துப் போகுது, இன்னொரு பொண்டாட்டி கட்டிக்கலாம்” என்று அலட்சியமாக கூறினார்.

பிறகு அவர் 108 ஆம்புலன்ஸை வரவழைத்தார். அப்போதுதான் என் மனைவி இறந்து விட்டார் எனத் தெரிந்து கொண்டேன்.
​ஆறுமுகம் என் கையில் ரூ. 2000/- கொடுத்து இந்த விஷயத்தை பெருசாக்காதே” என்று மிரட்டினார். பிறகு ஒரு சிறிய வேனில் உடலை ஏற்றி சிங்கடிவாக்கத்திற்கு அனுப்பி விட்டார்.

​நாங்கள் பழங்குடி இருளர் என்பதனால் எங்களை அடைத்து வைத்து சித்திரவதை செய்து, முறையான கூலியை கொடுக்காமல் சாராயத்தை வாங்கி ஊற்றி எங்கள் உழைப்பைச் சுரண்டிய விறகு கடை உரிமையாளர் ஆறுமுகம் உள்ளிட்ட அனைவர் மீதும், எஸ் சி எஸ் டி சட்ட பிரிவு, கொத்தடிமைகள் பிரிவில் வழக்கு பதிவு செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை என் மனைவியின் சடலத்தை பெற்றுக் கொள்ள மாட்டேன், நாளையும் பொன்னேரிகரை காவல் நிலையத்தில் இரண்டாம் நாளாக உள்ளுறுப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

செய்திகள் ; லக்ஷ்மிகாந்தன் /எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed