கும்மிடிப்பூண்டி அடுத்த ஓபசமுத்திரம் ஊராட்சியில் கடந்த 2 வருட காலத்திற்கும் மேலாக நிலவி வரும் குடிநீர் பிரச்சனையை சரிசெய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது...
கும்மிடிப்பூண்டி அடுத்த ஓபசமுத்திரம் ஊராட்சியில் சுமார் 3,000 பேர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சி பழவேற்காடு ஏரிக்கரையோர பகுதி என்பதால் அப்பகுதியில் நிலத்தடி நீர் உவர்ப்பு தன்மையுள்ளதாக இருக்கும். இந்த நிலையில் இப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனையை சரிசெய்யும் வகையில், 10 கி.மீ தொலைவில் உள்ள நத்தம் கிராமத்தில் இருந்து பைப்லைன் மூலம் இப்பகுதிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் அப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் கடந்த 2 வருட காலமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு 4 நாட்கள் கூட குடிநீர் விநியோகம் முறையாக இருப்பதில்லை என்றும், அப்படி குடிநீர் விநியோகப்பட்டாலும், 30 நிமிடத்திற்கு மேல் குடிநீர் வருவதில்லை என்றும் இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தங்கள் பகுதிக்கு வரும் பைப்லைன் வழியே உள்ள 5க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 200்க்கும் மேற்பட்டோர் மோட்டர் வைத்து தண்ணீரை உறிஞ்சுவதால் தங்களுக்கு குடிநீர் பாதிக்கப்படுவதாக இவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால்
இப்பகுதி மக்கள், கும்மிடிப்பூண்டி வட்டார் வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் தங்கள் ஊரில் குடிநீர்மேல்நிலைத்தொட்டி கட்டி 3 வருடங்கள் ஆகியும்
பயன்பாட்டிற்கு வராததை குறிப்பிட்டவர்கள், தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் விநியோகத்தை வழங்க கோரிக்கை வைத்தனர்.

பின்னர் அவர்களிடம் பேசிய கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் ஓபசமுத்திரம் பகுதியில் புதியதாக 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு, ஆழ்துளை கிணறு அமைக்கும் இடம் கூட தேர்வு செய்யப்பட்ட நிலையில், பொறியாளர்கள் விரைந்துஅங்கு 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி நிறைவடையும் என்றும், அதன் பின் அப்பகுதியில் குடிநீர் பிரச்சனை சரியாகும் எனவும் தெரிவித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விலகி கொண்டனர்.
இந்த நிலையில், இந்த போராட்டம் காரணமாக பாதுகாப்பிற்கு வந்த காவல் துறையினரை
முற்றுகையிட்ட அப்பகுதி பெண்கள், தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் மது பான கடையால் சமூக விரோத செயல்கள் அதிகமாக நடைபெறுவதால் அந்த கடையை முற்றிலும் அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

செய்திகள் ; ஜான் பிரான்சிஸ் / எதிரொலி / 8939476777
