- 500-க்கும் மேற்பட்டோர் கைகளைத் தட்டி முழக்கமிட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
- தண்டவாளத்தில் அமர்ந்த போராட்டக்காரர்களுடன் காவல்துறையினர் தள்ளுமுள்ளு. போராட்டக்காரர்கள் குண்டுகட்டாகக் கைது
————-
இந்தியாவில் 13 கோடி மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைக் கைது செய்ய வலியுறுத்தியும், காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே ‘ஜனநாயக மீட்பு இயக்கம்’ சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.


இப்போராட்டத்திற்கு ஜனநாயக மீட்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மகேஷ் தலைமை தாங்கினார். இதில் மக்கள் மன்ற நிர்வாகிகள் ஜெஸ்ஸி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அருள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாகக் கைகளைத் தட்டி ஒலி எழுப்பியும், கோரிக்கைகளை வலியுறுத்தி வீரியமிக்க கண்டன முழக்கங்களை எழுப்பியும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.


ஊர்வலமாக வந்த ஜனநாயக மீட்பு இயக்கத்தினர், ரயில்வே நிலையத்தில் காவல்துறையினர் அமைத்திருந்த பலத்த பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளைத் திடீரென மீறிப் பாய்ந்தனர். தண்டவாளத்தில் இறங்கி அமர்ந்து தொடர்ந்து ஆவேச கோஷங்களை எழுப்பியதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தியவர்களைக் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்து, அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.


போராட்டத்தின் போது மக்கள் மன்ற இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றபோது, அவரைக் காவல்துறையினர் குண்டுகட்டாகத் தூக்கி வந்து தாக்கியதாகக் கூறி, ஜனநாயக மீட்பு இயக்கத்தினர் காவல்துறையினரைக் கண்டித்து ஆவேசமாக உரக்கப் பேசினர்.
போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய ஜனநாயக மீட்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மகேஷ் தெரிவித்ததாவது;
13 கோடி இந்தியர்களின் வாக்குரிமையைப் பறித்ததற்க்காக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்து உடனடியாக அவரைக் கைது செய்ய வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ள பணிப் பாதுகாப்பு மற்றும் விசேஷப் பணிக்குப் பிந்தைய சலுகைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.


SIR மூலம் நடத்தப்பட்ட தேர்தல்களைச் செல்லாததாக்கி ரத்து செய்ய வேண்டும்.தேர்தல் ஆணையர்கள் நியமன முறையை வெளிப்படைத்தன்மையுடன் மாற்றியமைக்க வேண்டும்.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக, மீண்டும் பழைய வாக்குச் சீட்டு முறையிலேயே தேர்தல்களை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த ரயில் மறியல் போராட்டத்தை நடத்தியுள்ளோம்,” எனக் கூறினார்.

செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் / எதிரொலி . இன் / 8939476777
