விவசாயிகளின் நலனை புறந்தள்ளும் அரசு அதிகாரிகள் ; புதிய தமிழகம் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் சுதன் கடும் கண்டனம்!
தென்திருப்பேரை பேரூராட்சி நிருவாகத்தை விசாரனை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும்! புதிய தமிழகம் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் ‘எல்லைப் பறவை’ என்.ஆர். சுதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம் தென்திருப்பேரை பேரூராட்சி தென்திருப்பேரையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகம், கால்நடை மருத்துவமனை, அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நவத்திருப்பதிகளில் ஒன்றான மகரநெடுங்குழைக்காதர் கோவில், நவ கைலாயங்களில் ஒன்றான ஸ்ரீஅழகிய பொன்னம்மாள் உடனுறை ஸ்ரீகைலாச நாதர் திருக்கோவில் போன்ற முக்கிய கோவில்களும், அரசு அலுவலகங்களும், நீர் நிலையான கடம்பாகுளத்தை மையமாக கொண்டு விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தாமல் சில ஆதிக்க மனப்பான்மை கொண்ட நபர்களால் விவசாயத்தை நம்பி வாழும் மக்கள் முன்னேற்றம் அடைந்து விடக்கூடாது என்ற கெட்ட எண்ணத்தில் அரசின் நலத்திட்டங்கள் வரவிடாமல் தடுத்து வருகின்றனர்.
தென்திருப்பேரை கஸ்பா கிராமங்களான தென்திருப்பேரை, குருகாட்டூர், மேலக்கடம்பா, முத்துகிருஷ்ணாபுரம், கோட்டூர், கல்லாம்பாறை, மணத்தி, புறையூர், இராஜபதி போன்ற கிராமங்களில் சமூக நீதி சார்ந்த மக்கள் .பெரும்பான்மையாக விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். ஆழ்வார்திருநகரி, ஆறுமுகநேரி பேரூராட்சிகளில் சமூக நீதித் துறையின் சார்பில் தாட்கோ வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோன்று தென்திருப்பேரை பேரூராட்சியில் தாட்கோ வணிக வளாகம் அமைத்திட வேண்டும்.
நெல், வாழை போன்றவற்றை உற்பத்தி செய்யும் மக்களை வணிகர்களாக உருவாக்க சமூக நீதித்துறை முயற்சி மேற்கொள்ள வேண்டும். இப்பகுதியில் நிலவும் பிரச்சனைகளை சிலர் தங்களுடைய சுயநலத்திற்காக பயன்படுத்தி ஏழை எளிய விவசாயிகளின் நலன்களை புறந்தள்ளி வருகின்றனர். சிலர் விவசாயிகளின் போர்வையில் முதலாளித்துவத்திற்கு துணையாக கைக் கூலிகளை வைத்துக்கொண்டு தங்களுடைய சுய பொருளாதாரத்தை பெருக்கி வருகின்றனர். அவற்றை தற்போதைய அரசு ஆய்வு செய்ய வேண்டும்.
கடம்பாகுளம் என்பது விவசாயிகளின் முக்கிய வாழ்வியலின் ஆதாரம். ஆனால் கடந்த ஆட்சியில் மேலகல்லாம் பாறையில் மீன் பண்ணை அமைத்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். பெரும்பான்மை மக்களின் தொழிலான விவசாயத்தை புறந்தள்ளிவிட்டு மீன் பண்ணை அமைத்து அதில் பல்வேறு முறைகேடுகளை நிகழ்த்தியுள்ளனர்.
இது தொடர்பாக தென்திருப்பேரை பேரூராட்சி நிருவாகத்தை விசாரனை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும். நெல் கொள்முதல் நிலையம் மேலக்கல்லாம்பாறையில் அமைப்பதற்கு அரசு நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்தும், தென்திருப்பேரை பேரூராட்சியில் தாட்கோ வணிக வளாகம் அமைவதிற்கும் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற திருக்குறள் தத்துவத்தின் படி செயல்படுவதாகக் கூறும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, தென்திருப்பேரை பகுதியின் நிருவாகச் சீர்கேட்டினை சீர் செய்ய வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு புதிய தமிழகம் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் ‘எல்லைப் பறவை’ என்.ஆர்.சுதன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
