கோவை நவஇந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரியில் 2026 – 2027 ஆம் கல்வியாண்டில் முதுநிலை பட்டப் படிப்பில் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு மாணவர்- மாணவியர்களுக்கு வரவேற்பு விழா கல்லூரியின் கருத்தரங்க அறையில் நடைபெற்றது.
விழாவிற்கு , ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரி முதல்வர் - செயலர் , முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை தாங்கி, கல்லூரியின் சிறப்பம்சங்களைப் பட்டியலிட்டு பேசினார். விழாவின் சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய சரக்கு , சேவை வரித்துறை, வரி ஏய்ப்பு தடுப்புப் பிரிவின் முன்னாள் உதவி ஆணையர் ஆர். மணிமோகன், ஸ்டேட் ஸ்ட்ரீட் எச்.சி.எல். சர்வீசஸ், முன்னாள் மையத் தலைவர் பி.எஸ்.இராமச்சந்திரன் கலந்து கொண்டு விழாவினைக் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.தொடர்ந்து,
சிறப்பு அழைப்பாளர் ஆர். மணிமோகன் பேசியதாவது :
மாணாக்கர்கள் புத்தகங்கள் வழியாக தகவல்களைப் பெற பழக வேண்டும். தொழில்நுட்பங்கள் வழி கற்பதை விட புத்தகங்களின் மூலம் தொழில்நுட்பங்களை உருவாக்கும் தகவல்களைக் கற்றுக் கொள்ளலாம். நீங்கள் வாழ்க்கையில் பெரிய உயரங்களைத் தொட வேண்டுமானால் நல்ல சிந்தனைகளும், கடின உழைப்பும் மிகவும் அவசியம். நமக்கான வெற்றி என்பது ஒரு நல்ல மரம் வளர்வது போன்றது. அதன் ஆரம்பகால வளர்ச்சியிலிருந்து முறையாக பராமரிப்பதன் மூலம் நல்ல விருட்சமாக அது உருமாறுகிறது. அதுபோல நாம் நல்ல எண்ணங்கள், செயல்பாடுகள் வழியாக முன்னேற வேண்டும். நம் நேரத்தை சமூக வலைதளங்கள் வீணடிக்கின்றன. அதில் நேரத்தை செலவிடுவதைத் தவிர்த்து உங்கள் துறை சார்ந்த தேடல்களில் நேரத்தை செலவிட வேண்டும். நீங்கள் முன்னேறுவதற்கான பாதையைத் தேர்வு செய்து அதில் பயணிக்க வேண்டும். நாம் தெளிந்த சிந்தனை உடையவர்களாய் இருந்தால் எல்லாப் பிரச்சினைகளுக்கும் நம்மால் தீர்வு காணமுடியும். போட்டி நிறைந்த உலகத்தில் வெற்றி பெற நம்மைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். உங்கள் கனவிற்காக உழைத்தால் நிச்சயம் ஒருநாள் அதை உங்களால் அடைய முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர்,
சிறப்பு அழைப்பாளர் பி. எஸ். இராமச்சந்திரன் பேசியதாவது :
2 ஆண்டுகள் உங்கள் வாழ்க்கையை இந்த கல்லூரியில் முதலீடு செய்துள்ளீர்கள். இங்கு உங்களுக்கான புதிய அத்தியாயம் தொடங்குகிறது. இந்தியா பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக உருவெடுத்துள்ளது. மருத்துவம், உயிரியல், விண்வெளி ஆராய்ச்சிகள், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு சார்ந்த செயல்பாடுகள் என அனைத்துத் துறைகளிலும் நாம் வளர்ந்து வருகிறோம். இதன் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு நீங்களும் பங்காற்ற வேண்டும். நாம் வாழ்க்கையில் வெற்றி பெற ஐந்து முக்கிய பொருண்மைகளை கடைபிடிக்க வேண்டும். அறிந்து கொள்ளும் ஆர்வம், தொழில்நுட்பம் சார்ந்த அறிவு, தொடர்புத்திறன், நேர்மை, தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்கும் பழக்கம் இவை நம்மை வெற்றியாளர்களாக மாற்றும். நேரம் விலை மதிப்பற்றது. நேரத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பொன்னான நேரத்தை சமூக வலைதளங்களில் வீணடிக்காதீர்கள். நிதி சார்ந்த சவால்களை நிர்வகிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களை நீங்கள் நம்புங்கள். பெற்றோருக்கு உண்மையாக நடந்து கொள்ளுங்கள். தைரியம், கடின உழைப்பு ஆகியவை உங்களை வெற்றியாளர்களாக மாற்றும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் , முன்னதாக கல்லூரியின் வணிகவியல் துறைத்தலைவர் ஜி.அகிலா வரவேற்றார். உயிரி தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் எஸ். ரதீஷ்குமார் நன்றி கூறினார். விழாவில், மாணவர் , மாணவியர்கள், பேராசிரிய பெருமக்கள், பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர் / எதிரொலி / 8939476777
