கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம், மேல் மக்கான் மற்றும் சின்ன மக்கான் பகுதிகளில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக நடைபெற்று வரும் மொகரம் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெற்று, பஞ்சா சங்கம நிகழ்வுடன் கோலாகலமாக நிறைவடைந்தது.
திருவிழாவின் 8-ஆம் நாள் நிகழ்ச்சியாக குண்டம் இறங்கும் நிகழ்ச்சி, இன்னிசைக் கச்சேரி மற்றும் அன்னதானம் நடைபெற்றது. தொடர்ந்து 10-ஆம் நாள் நிறைவு விழாவையொட்டி நேற்று மாலை 5 மணியளவில் மேல் மக்கான் பஞ்சா அல்லா சாமியும், சின்ன மக்கான் பஞ்சா அல்லா சாமியும் தேசி செட்டி தெரு சந்திப்பில் சங்கம நிகழ்வில்( தலைக்கூடும் ) ஒன்றிணைந்தன. இந்த புனித நிகழ்வை காணவும், தரிசனம் செய்து வழிபடவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

பக்தர்கள் மிளகு, முத்துக்கொட்டை, உப்பு உள்ளிட்டவற்றை பஞ்சா மீது தூவி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் இஸ்லாமிய இளைஞர்கள் கோல்சண்டை, கத்திச்சண்டை, புலி வேடம், கரி வேடம் உள்ளிட்ட பாரம்பரிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இந்நிகழ்வுகள் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தன.
இந்நிகழ்ச்சி மேல் மக்கான் கமிட்டியினரான காதர் பாட்ஷா, மசால் பாபு, அக்பர், இனாயத், சாதிக் பாஷா, அஜுஸ் ஆகியோரின் ஏற்பாட்டில், தொழிலதிபர்கள் ஜே.கே.எஸ். பாபு மற்றும் சாஜித் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இதில் முகமது இத்ரீஸ், செய்தியாளர் மகபூப் பாஷா, மிட்டு, அப்துல், யாசின் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மேல் மக்கான், சின்ன மக்கான் மற்றும் விழாக்குழுவினர் திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆய்வாளர் சங்கர் தலைமையில் காவேரிப்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சிறப்பாக மேற்கொண்டனர்.
செய்திகள் ; மாருதி மனோ எதிரொலி / 8939476777
