மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அடுத்தடுத்து நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், குழந்தைகள் உட்பட 14 பேர் பலத்த காயமடைந்தனர்.
சரக்கு வேன் மோதி பெண் பலி:
திருமங்கலம் அருகே உள்ள மறவன்குளத்தைச் சேர்ந்தவர் பத்மாவதி (33). இவர் தோப்பூரில் உள்ள ஒரு தனியார் டைல்ஸ் நிறுவனத்தில் பணியை முடித்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். கப்பலூர் சுங்கச்சாவடியைக் கடந்து சென்றபோது, பின்னால் வந்த சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பத்மாவதி சம்பவ இடத்திலேயே கொடூரமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த திருமங்கலம் காவல் துறையினர், பத்மாவதியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுற்றுலா வேன் கவிழ்ந்தது:
இதேபோல, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் வேனில் சுற்றுலா புறப்பட்டு பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்த்தனர். தொடர்ந்து, கன்னியாகுமரிக்குச் சென்றுவிட்டு மீண்டும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வேனில் வந்து கொண்டிருந்தனர்.
இரவு 8 மணி அளவில் வேன் திருமங்கலம் அருகே உள்ள தோப்பூர் பகுதியில் வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த மலர்கொடி (27), சந்திரசேகர் (44), ஜஸ்வின் (5), சின்னபாப்பு (60), வேண்டா (58) உட்பட 7 பேர் பலத்த காயமடைந்தனர். மேலும், சிறுவர்கள் உட்பட 7 பேர் லேசான காயமடைந்தனர்.
அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு, காயமடைந்த 14 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஆஸ்டின்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777
