அல்லது, அதுபோன்ற ஒரு மாயத் தோற்றத்தை அதிகாரிகள் உருவாக்கி வைத்திருக்கிறார்களா…
பொன்னேரி நகராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு பணியை மேற்கொண்டனர். அதில், திருவள்ளூர் டி.எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் ஆறு பேருக்கும் மேற்கொண்ட குழுவினர் அந்த திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது நகராட்சி அலுவலகத்தின் உள்ளே இருந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மட்டும் இல்லாமல் கவுன்சிலர்கள் உட்பட உள்ளே இருந்த அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நகராட்சி அலுவலகத்தின் முன் கதவுகள் சாத்தப்பட்டு இருந்தது. அந்த சூழ்நிலையில், அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் மற்றும் வெளி ஆட்கள் உட்பட யாரையும் அலுவலகத்தில் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.


இந்நிலையில், வழக்கம்போல் மதியம் நகராட்சி அலுவலகத்திற்கு நகர மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன் அவர்கள் வந்திருந்தார். அவரையும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அலுவலகத்தில் உள்ளே அனுமதிக்கப்படாததால் வெளியிலேயே அமர்ந்து காத்திருந்தார். அப்போது அங்கிருந்த பத்திரிகையாளர்கள் நகர மன்ற தலைவர் அவர்களிடம் சில கேள்விகளை கேட்டனர்.

அதற்கு பதில் அளித்து பேசிய நகர மன்ற தலைவர், பரிமளம் விஸ்வநாதன் அவர்கள் கூறுகையில் ;
நான் தற்போது வழக்கம் போல் அலுவலகம் வருவதற்காக வந்தேன். ஆனால், இங்கே திடீரென நான் வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் வந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு பயந்து கொண்டு நான் ஏன் திரும்பிப் போக வேண்டும். “என் மடியில் கணம் இருந்தால் தானே, இங்கு வர எனக்கு பயம் இருக்கும்,” நான் மதியம் சாப்பிட்டு விட்டு, சில முக்கிய பணிகளை செய்ய வேண்டியது இருந்தது. ஆகவே, நான் இங்கு வந்திருக்கிறேன், என்று கூறினார்.
மேலும், அவரிடம் பத்திரிகையாளர்கள் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து கேட்டதற்கு,
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே ஆகஸ்ட் மாதமே ஆலோசனைக் கூட்டம் நடத்துவது வழக்கம், ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக இன்று வரை மழைகால ஆலோசனை கூட்டம் நடத்தப்படவே இல்லை, இங்கு பணியாற்ற கூடிய சில அதிகாரிகள் தான்தோன்றித்தனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை யார் தான் கேள்வி கேட்பது ? என்று தெரியவில்லை, சில அதிகாரிகள் என்னிடம் எந்த விதமான முக்கிய ஆலோசனைகளும் கேட்பதும் இல்லை, அதையும் மீறி, சில பணிகளை செய்ய வேண்டும் என, நான் அறிவுறுத்தி கூறினாலும் அதை அவர்கள் செயல்படுத்துவதும் கிடையாது.


பல வார்டு உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை என்னிடம் சொல்லி, நான், அதிகாரிகளிடம் அந்த பிரச்சனையை குறிப்பிட்டு அதை ஏன் செய்யவில்லை ? என கேட்டால், அதிகாரிகள் கவுன்சிலர்களை மிரட்டி விடுகிறார்கள், அதனால் தற்போது கவுன்சிலர்கள் யாரும் என்னுடைய கவனத்திற்கு எந்த பிரச்சினையையும் கொண்டு வருவதில்லை, அவர்களே நேரடியாக அதிகாரிகளிடம் தங்கள் குறைகளை செய்து கொடுக்கும்படி, கெஞ்சி கொண்டு இருக்கிறார்கள், என கூறினார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், நாம் உண்மை நிலையை அறிய சில கவுன்சிலர்களை தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்தபோது, நகராட்சித் தலைவர் சொன்னது போல், கவுன்சிலர்கள் சிலர் அதிகாரிகளுக்கு எதிராக பேசுவதற்கு தயங்குகிறார்கள் என்பது உண்மை என தெரியவந்தது.


இதற்கிடையே பொதுமக்கள் மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள் சிலரிடம் நாம் விசாரித்ததில், பொன்னேரி நகராட்சி நிர்வாகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதே மர்மமாக இருப்பது தெரிய வருகிறது. அப்படி இல்லை என்றால், அதுபோன்ற ஒரு மாயத் தோற்றத்தை அதிகாரிகள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்பதையும், நாம் புரிந்து கொள்ள வேண்டியது உள்ளது. பொன்னேரி நகராட்சி நிர்வாகம் கேள்வி கேட்பாரற்று கிடக்கிறது, என்பது மட்டும் உண்மை என, புரிந்து கொள்ள முடிகிறது.
நகராட்சி அதிகாரிகள், நகர மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் இடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்கி பிரித்தாளும் சூழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள். அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நகராட்சி அதிகாரிகள் பல சித்து விளையாட்டுகளை விளையாடி கொண்டு இருக்கிறார்கள். என்பது தெளிவாகத் தெரிகிறது. அதற்கு உதாரணமாக வெட்ட வெளிச்சமாக தெரியக்கூடிய ஒரு விஷயம், கடந்த மூன்று மாதங்களாக நகராட்சி மன்ற கூட்டம் நடத்தப்படவில்லை என்பது ஒரே சாட்சி,


ஒரு மாமன்ற உறுப்பினர் தொடர்ந்து மூன்று கூட்டத்திற்கு வருகை புரியவில்லை என்றால் அவருடைய பதவியை பறிப்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால், மூன்று கூட்டம் நடைபெறாமல் இருக்கக்கூடிய இந்த நிர்வாகத்தை நகராட்சி நிர்வாக உயர் அதிகாரிகள் எப்படி பார்க்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.
வடகிழக்கு பருவமழை என்றாலே, திருவள்ளூர் மாவட்டம் தான் அதிக அளவில் பாதிப்பு ஏற்படும். அதிலும், திருவள்ளூர் மாவட்ட அளவில் எடுத்து கொண்டால், பொன்னேரி பகுதி தான் மிகவும் பதட்டமான பகுதியாக எப்போதும் இருக்கும். திருவள்ளூர் மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரால் தான், மக்களுக்கு பாதிப்பு இருக்கும். ஆனால், பொன்னேரி நகராட்சி பகுதியை ஒட்டி செல்லக்கூடிய ஆரணி ஆற்றின் கடைநிலைப் பகுதி பொன்னேரி என்பதால், ஒவ்வொரு வருடமும் பொன்னேரி நகராட்சி பகுதிக்கு மழை காலம் ஒரு கண்டமாகவே இருந்து செல்லக்கூடிய சூழ்நிலை இருந்து வருகிறது.


அதிலும், இதற்கு முன்பாக பலமுறை ஆரணி ஆற்றின் கடைநிலைப் பகுதியான ஆண்டார் மடம் பகுதியில் உடைப்பு ஏற்படுவதற்கு காரணம், (இந்த அதிகாரிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை) ஆரணி ஆற்றின் அளவுக்கு அதிகமாக வரக்கூடிய வெள்ளம், பொன்னேரி கௌரி தியேட்டர் எதிரில், மூகாம்பிகை நகர் பகுதியை ஒட்டி இருக்கக்கூடிய கரையில் ஒவ்வொரு வருடமும் உடைப்பு ஏற்படக்கூடிய அளவிற்கு சூழ்நிலை இருக்கும். அப்படி ஏதேனும் பிரச்சனைகள் நடந்து விடக்கூடாது என்பதற்காகவே,
பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டார் மடம் பகுதியில் கரைகளை உடைத்து தண்ணீரை வெளியேற்றி இருக்கிறார்கள் என்ற சூழ்நிலையும் இருந்திருக்கிறது.
இவ்வளவு அபாயகரமான சூழல் இருக்கக்கூடிய வடகிழக்கு பருவ மழை காலகட்டத்தில், பொன்னேரி நகர மன்ற கூட்டம் நடக்கவில்லை என்பது மிகவும் ஒரு தவறான நிகழ்வு என பொதுமக்கள் வருத்தம் கொள்கிறார்கள்.

P.G.பாலகிருஷ்ணன் / எதிரொலி . இன் / 8939476777
