முக்கிய கோவில் நகரமான ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள புனித திருமுக்குளத்தை இந்து அமைப்பினர் உழவாரப்பணி செய்து தூய்மை செய்தனர்.
தேனினும் இனிய திருப்பாவைப் பாசுரங்கள் பாடிய கோதை என்ற ஆண்டாள் வாழ்ந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். அந்த ஆண்டாள் நீராடிய குளம் இந்த ஊரின் மேற்குப்பக்கத்தில் உள்ள திருமுக்குளம் ஆகும். ஆண்டாளின், திருப்பாவை தமிழின் விலை மதிப்பற்ற பொக்கிஷமாகக் கருதப்படுகிறது. இத்தகைய புனிதம் வாய்ந்த இந்தத் திருமுக்குளத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள், தங்கள் வீட்டுக்குப்பைகளைக் கொட்டி, இந்தக்குளத்தை அசிங்கப்படுத்தி உள்ளனர்.
மாசடைந்த இக்குளத்தைத் தூய்மை செய்வதில் அக்கறை காட்டாத அரசின் அலட்சியம் கண்டு வருந்திய இந்து அமைப்பினரும், இந்நகரின் ஸ்ரீ ஆண்டாள் பக்த சபா உறுப்பினர்களும் தாங்களாகவே முன் வந்து இக்குளத்தை ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் தூய்மை செய்து வருகின்றனர். இதன்படியே இம்மாதமும் இக்குளத்தில் உழவாரப்பணி செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர பா.ஜ.க., சேவா பாரதி, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். விஸ்வ இந்து பரிஷத், அமைப்பைச் சேர்ந்தவர்களும், சிறுவர்களும், இந்தக் குளத்தின் படிக்கட்டுகளை சுத்தம் செய்தனர்.

இதில், வேதிக்குமார், மாரிச்சாமி, ஜெயகுமார், பா.ஜ.க. கட்சியின் பிரமுகர் பிரபாகர், ஆர்.எஸ்.எஸ். ஆர்.எஸ்.எஸ். மதன், பெருமாள், காளிதாசன், ஓய்வு பெற்ற ராணுவ சுபேதார் சரவணன், வழக்கறிஞரும் எழுத்தாளருமான எஸ். ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மைப்பணி செய்தனர். இப்பணிக்கான பொருளுதவியை ஆண்டாள் கோவில் தலைமை அர்ச்சகர் வி. முத்து பட்டர், தொழிலதிபர் ராஜேஷ் கனி, சமூக சேவகர் ரோட்டரி வேலாயுதம் ஆகியோர் நன்கொடையாகத் தந்தனர். இறுதியில், அர்ச்சகர் கோபி பட்டர் குளத்திற்கு மங்கல ஆரத்தி எடுத்தார். வந்திருந்தோர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி . இன் / 8939476777
