தமிழ்நாட்டில் தேனி, தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் நில அளவைத்துறை அலுவலர்கள் மீது சமூக விரோதிகள் நடத்தியுள்ள கொடூரத் தாக்குதல்களை கண்டித்து தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோரின் உத்தரவின்படி களப் பணியாற்றிய தேனி மாவட்டச் சார்பு ஆய்வாளர் ஜெகன்குமார் அவர்கள் மீது, ஓய்வுபெற்ற காவல் துறை உதவி ஆய்வாளர் சந்திரனின் ஆட்கள் கடந்த 21.09.2026 அன்று மிகக் கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக புகார் அளித்தும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

அதேபோல தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24.09.2026 அன்று நில அளவைப் பணியை முடித்துவிட்டுப் பேருந்து நிலையத்தில் காத்திருந்த மாற்றுத்திறனாளியான பெண் குறுவட்ட அளவர் ஜெயலட்சுமி அவர்களை , நில உரிமையாளர்கள் பலத்த தாக்குதல் நடத்தி சித்திரவதை செய்தனர்.

அதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்பு, திண்டுக்கல் மாவட்டத்தில் , நில அளவைப் பணிக்காகச் சென்ற வட்டச் சார்பு ஆய்வாளர் தங்கவேல் மற்றும் குறுவட்ட அளவர் சுசீலா ஆகியோரை பெட்ரோல் ஊற்றிக் கொலை செய்ய முயற்சி நடத்தப்பட்டது. இதே போல தொடர்ந்து, நில அளவையர்கள் மீது தாக்குதல் நடத்திய மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்ட அத்தனை சமூக விரோதிகளையும் உடனடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

வருவாய்த்துறை மற்றும் நில அளவைத்துறை ஊழியர்கள் அச்சமின்றிப் பணியாற்ற, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக “அரசு ஊழியர்கள் பணிப் பாதுகாப்புச் சட்டத்தை” நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயில் முன்பு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் சார்பாக நில அளவை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷமிட்டனர்.
அரசு ஊழியர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் காவல் துறை கைது செய்யாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கையாக வருகின்ற நாட்களில் நில அளவைப் பணியை புறக்கணிப்பது என எச்சரித்துள்ளனர்.

பேட்டி.வெங்கடேசன். மாவட்டத் தலைவர். தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு , காஞ்சிபுரம் மாவட்ட மையம்,
செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் / எதிரொலி . இன் / 8939476777
