வரலாற்றுச் சிறப்புமிக்க காஞ்சிபுரம் ஸ்ரீ தேவராஜ பெருமாள் திருக்கோவிலில், திவ்ய பிரபந்தம் பாடுவது, தீர்த்த மரியாதைகள் மற்றும் கோஷ்டி உரிமைகள் தொடர்பான வடகலை மற்றும் தென்கலை பிரிவினருக்கு இடையேயான நீண்டகால வழக்குகளும் விவாதங்களும் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.

சமீபத்தில் கோவில் சன்னதி முன் திரண்ட அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்ற விவாதத்தின்போது, இந்து சமய அறநிலையத்துறை அல்லது தேவஸ்தான அதிகாரிகள் பிறப்பிக்கும் நிர்வாக உத்தரவுகளை (Administrative Orders) விட, நீதிமன்றத்தின் சட்டப்பூர்வ உத்தரவுகளுக்கே (Judicial Orders) முழு முன்னுரிமையும் அதிகாரமும் உள்ளது என வழக்கறிஞர் வரதராஜன் சுட்டிக்காட்டினார்.

நீதிமன்ற உத்தரவுகளைத் தாண்டி நிர்வாக அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுக்கவோ அல்லது விசாரணை இன்றி புதிய உத்தரவுகளைப் பிறப்பிக்கவோ முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, கோவில் சன்னதியில் திரை திறக்கப்பட்ட நேரத்தில், கோவில் பணியாளர்களான மணியக்காரர் ஆனந்த் சர்மா, ஸ்ரீதர் மற்றும் ‘கட்டிங்’ வரதன் ஆகியோரிடம் விஜயராகவன் என்பவர் அதிகாரம் செலுத்தியதுடன், “நான் பூஜை செய்தால் என்ன?” எனக் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில் மரபுகளின்படி, “பூஜை” என்பது ஆகம விதிகளுடனும், மக்களின் மத உணர்வுகளுடனும் (Religious Sentiment) தொடர்புடைய ஒன்றாகும். வடகலை, தென்கலை மற்றும் தாத்தாச்சாரியார் பிரிவினரிடையே பல்வேறு உரிமைகள் சார்ந்த கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் சூழலிலும், நிர்வாகம் அதனை முறைப்படுத்தி வருகிறது. இதுவரை யாரும் தன்னிச்சையாக ‘நான் பூஜை செய்வேன்’ எனக் கோரிராத நிலையில், இந்த நபர் எந்த அடிப்படையில் இத்தகைய கேள்வியை எழுப்பினார் என்பது கோவில் வட்டாரத்திலும் பக்தர்கள் மத்தியிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகள் வெளியாகி, பக்தர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
செய்திகள் : லக்ஷ்மி காந்தன் / எதிரொலி / 8939476777
