கோயம்புத்தூரில் நடைபெற்ற 36-வது தமிழ்நாடு மாநில ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்ட ரோலர் டெர்பி அணிகள் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளன. மேலும், இப்போட்டியின் மூலம் தேசிய அளவிலான போட்டிக்குத் தமிழக அணி சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 6 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில், 36-வது மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோயம்புத்தூரில் கடந்த அக்டோபர் 31 முதல் நவம்பர் 5 வரை நடைபெற்றன. இப்போட்டிகளில் கிருஷ்ணகிரி மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் (KDRSA) சார்பில் 80-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர்.
இதில் ‘ரோலர் டெர்பி’ (Roller Derby) போட்டியில் மாணவர் பிரிவு (Boys), 18-வயதிற்கு உட்பட்ட ஜூனியர் மாணவியர் பிரிவு (Junior Girls) மற்றும் 18-வயதிற்கு மேற்பட்ட சீனியர் மாணவியர் பிரிவு (Senior Girls) என 3 பிரிவுகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து மொத்தம் 26 பேர் பங்கேற்றனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், மாணவர் பிரிவு (Boys Team): அபாரமாக விளையாடி இறுதிப் போட்டி வரை முன்னேறி வெள்ளிப் பதக்கத்தை (Silver Medal) தட்டிச் சென்றது. ஜூனியர் மாணவியர் பிரிவு (Junior Girls Team): திறம்படச் செயல்பட்டு வெண்கலப் பதக்கத்தை (Bronze Medal) வென்றது.

தேசியப் போட்டிக்கு 6 பேர் தேர்வு:
இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 6 வீரர்கள், அடுத்த மாதம் கர்நாடகாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் தமிழ்நாட்டின் சார்பில் விளையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் மாணவர் பிரிவில் 4 பேரும் (சக்தி குமார், பிரான்ஸ், தரனேஷ் ராஜ், நிஷாந்த் போர்ன்), ஜூனியர் மாணவியர் பிரிவில் ஒருவரும் (ஆர்த்தி), சீனியர் மாணவியர் பிரிவில் ஒருவரும் (மகேஸ்வரி)அடங்குவர்.
மாநில அளவில் பதக்கங்களை வென்று மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்ததோடு, தேசியப் போட்டிக்கும் தேர்வாகியுள்ள மாணவ, மாணவிகளை கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அலுவலர் (DSO) நடராஜ் முருகன் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்க நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்களும் வெற்றி பெற்ற வீரர்களுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777
