காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பருவ கால மாற்றம் காரணமாக வெயிலும் மழையும் மாறி மாறி, ஏற்பட்டு வருகிறது. மேலும் சுகாதாரமற்ற உணவு மற்றும் நீர், கிருமி, பாக்டீரியா , ஒட்டுண்ணி போன்றவற்றால் டெங்கு , ஸ்க்ரப் டைபஸ், வைடால் / டைபாய்டு, லெப்டோஸ்பைரோசிஸ் எலிப்பாய்ச்சல் மற்றும் மலேரியா போன்ற காய்ச்சல்களும் பரவுகின்றது.
குறிப்பாக மாணவ மாணவிகளுக்கு இதுபோன்ற வைரஸ் காய்ச்சல்கள் விரைவாக பரவுகிறது. வைரஸ் காய்ச்சல்களில் இருந்து அவர்களை தற்காத்துக் கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவைப்படுகின்றது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் நகரில் செயல்பட்டு வருகின்ற அகத்தியா மெட்ரிகுலேஷன் என்ற மேல்நிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பள்ளி நிர்வாகி சாந்தி அஜய்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இம்முகாமிற்கு, வாலாஜாபாத் அரசு சித்த மருத்துவமனை மருத்துவர் V. கலைவாணி MD(சித்தா) அவர்கள் தலைமை தாங்கி விழிப்புணர்வு உரையாற்றினார்.
இதில் டெங்கு காய்ச்சல் பரவும் முறைகள், கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்கும் வழிகள், சுற்றுப்புறத் தூய்மையின் முக்கியத்துவம் மற்றும் நோய் அறிகுறிகள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டது. முகாமின் ஒரு பகுதியாக மாணவ, மாணவியருக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
இந்நிகழ்வில் பள்ளி தாளாளர் அஜய்குமார், முதல்வர் சத்தியா சபரீசன், ஒருங்கிணைப்பாளர் வசந்திராஜ் மற்றும் ஆசிரியர்கள், பள்ளிப் பணியாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பேண உதவும் வகையில் இச்சிறப்பு முகாமினை நடத்திய பள்ளி நிர்வாகத்திற்குப் பெற்றோர்கள் தங்கள் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் / எதிரொலி / 8939476777
