கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்த 8 தமிழக மாணவர்களில் ஒருவரான முரளி கிருஷ்ணனின் குடும்பம் தற்போது ஆதரவின்றித் தவிக்கும் நிலையில், தாய் லதாவும் தங்கை அபிதாவும் கண்ணீர் பேட்டி. 

உறவினர்களின் அனுதாபம் ;

உறவினர்கள் ஒவ்வொருவராய் வந்து செல்லும்போது அந்த வீட்டிலிருந்து அழுகுரல் சத்தமாய் கேட்கிறது. சிலர் ஆறுதலாய்ப் பேசிவிட்டுச் செல்கிறார்கள்; இன்னும் சிலர் இப்படியொரு நிலை உனக்கு ஏற்பட்டிருக்கக்கூடாது என்று அனுதாபம் தெரிவிக்கிறார்கள். கடந்த சில நாட்களாய் அந்த வீடு அப்படிதான் இருக்கிறது. சோகம் கவ்விய முகத்தோடு, உணவு உண்டார்களா தூங்கினார்களா என அறிய முடியாமல் வீட்டிலுள்ள ஒவ்வொருவரின் முகமும் அழுதழுது வீங்கிப் போய்கிடக்கிறது.

கொடூர விபத்து ;

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்திலுள்ள கைப்பமங்கலம் தேசிய நெடுஞ்சாலை எண் 66இல் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி இரவு 12 மணிக்கு நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பொறியியல் பயிலும் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டுக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பயின்றவர்கள். குருவாயூர் கோவிலுக்குச் சென்று திரும்பியபோது இந்தச் சம்பவம் நடந்தது.

பொறியியல் இறுதியாண்டு ;

இவர்களில் மதுரையைச் சேர்ந்த சந்தோஷ் (20), ஜோஷ்வா வில்சன் (21), முரளி கிருஷ்ணன் (21), பிரசன்னா (20), திண்டுக்கல்லைச் சேர்ந்த யுவசஞ்சித் (21), ஜீவா (20), சூர்யா (20), சேலத்தைச் சேர்ந்த விஷ்வா (20) ஆகியோர்கள் ஆவர். நடைபெற்ற விபத்துக் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சமூக வலைதளங்களில் அது குறித்த கருத்துமோதல்கள் நடைபெற்று வருகின்றன.

தாயாரின் கண்ணீர் ;

இந்த சம்பவம் குறித்து, பலர் பலவிதமான தங்களுடைய சொந்த கருத்துக்களை பரப்பி வரும் நிலையில், அதில் இருக்கக்கூடிய சில உண்மைகளை நாம் வெளியுலகத்துக்கு சொல்ல வேண்டும் என்ற மனநிலையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அய்யன்கோட்டை கிராமம் அழகுமுத்துக்கோன் நகரிலுள்ள விபத்தில் இறந்த மாணவர் முரளி கிருஷ்ணன் வீட்டிற்குச் சென்றோம்.

மிகச் சிறிய வாடகை வீடு. முரளியின் தாயார் லதா, தனது மகனின் போஸ்போர்ட் புகைப்படத்தையும், கல்லூரியில் அவர் வாங்கிய சான்றிதழ்கள் மற்றும் மெடலைக் கையில் வைத்துக் கொண்டு கண்ணீர் விட்டுத் தேம்பி அழுத நிலையில் அமர்ந்திருந்தார்.

துக்கம் விசாரிப்பு ;

அவரைச் சுற்றிலும் துக்கம் விசாரிக்க வந்த உறவினர்களும், அக்கம்பக்கத்தவரும் அமர்ந்திருந்தனர். முரளியின் அப்பத்தா கோவிந்தம்மாள் தன்னுடைய பேரன் தன் மீது காட்டிய அன்பையும் கரிசனத்தையும் நினைவூட்டியவாறே ஒப்பாரி வைத்து தாள முடியாத வேதனையில் கதறிக் கொண்டிருந்தார். ‘இன்னும் நிறைய பேருக்குத் தெரியாது. தகவல் தெரிந்தவர்கள் ஒவ்வொருவராய் இப்போதுதான் வருகிறார்கள்’ என்று நம்மிடம் கூறினார் முரளியின் தங்கை அபிதா. மதுரை திருப்பாலை அருகேயுள்ள யாதவா பெண்கள் கல்லூரியில் பி.காம் (சிஏ) இரண்டாமாண்டு பயில்கிறார். முகமெல்லாம் வீங்கிப் போய் கனத்த சோகத்துடன் உறவினர்களிடம் நடந்த விசயங்களைக் கூறிக் கொண்டே இருக்கிறார்.

5 வயதில் தந்தையின் மரணம் ;

முரளி கிருஷ்ணனுக்கு 5 வயது இருக்கும்போது, ஆடு மேய்க்கச் சென்ற அவரது தந்தை முருகன், இடி தாக்கி உயிரிழந்து போனார். மொத்தக் குடும்பத்தின் பாரமும் லதா மீது விழ, நூறுநாள் வேலை மற்றும் கிடைக்கின்ற கூலி வேலைகளுக்குச் சென்று, அரும்பாடுபட்டு தனது இரு குழந்தைகளையும் படிக்க வைத்துள்ளார். மாமனார் கந்தவேல் 15 ஆண்டுகளாக பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். மாமியார் கோவிந்தம்மாள் வீட்டு வேலைகளில் ஒத்தாசை செய்கிறார். மேற்கண்ட ஐந்து பேரின் வயிற்றைக் கழுவியது லதாவின் வருமானம் மட்டுமே.

நம்பிக்கையோட இருந்தோம் ;

‘என் வீட்டுக்காரரு இறந்த பெறகு ரெண்டு புள்ளைகளையும் ரொம்ப கஷ்டப்பட்டு வளத்தேன். நாம தான் படிக்கல. நம்ம புள்ளைகளாவது படிக்கணும்கற வைராக்கியந்தான் இதுக்குக் காரணம். படிச்சு முடிச்சு குடும்பத்த நல்ல நிலைக்கு கொண்டு வந்துருவான்னு நம்பிக்கையோட இருந்தப்போ இப்படி அநியாயமா விபத்துல இறந்துபோனத நெனச்சா தாங்க முடியலங்க. மக படிச்சு முடிச்ச பெறகு கல்யாணம் செஞ்சு குடுக்கணும்கறத நெனச்சா என்ன செய்யப்போறோம்னு தெரியல’ என்கிறார் லதா மிகுந்த வேதனையோடு.

பொய்ய பரப்புறாங்க…

சென்னைக்கு வேலையாகச் சென்றிருந்த முரளியின் சித்தப்பா ஆனந்தக் கண்ணன் நம்மிடம் செல்பேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, ‘ரொம்ப அமைதியான பையன் சார். எந்த கெட்ட பழக்கவழக்கங்களும் இல்லாதவன். கூட போன அந்தப் பசங்களும் அப்படித்தான். அயயங்கோட்டைக்கு கூட இந்தப் பசங்க வந்திருக்காங்க. ஆனா, அவங்க குடிச்சிட்டு கார் ஓட்டுனதா செய்தி பரப்புறத நெனச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு. இன்னும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வரல. அது வந்த பெறகு என்ன செய்யலாங்கறத முடிவு பண்ணணும்’ என்றார்.

மன வேதனை ;

குருவாயூர் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு அவர்கள் கிளம்பும்போது, உடன் வந்த இரண்டு விடுதி மாணவர்களுக்காக அங்கிருந்து சீக்கிரம் புறப்பட்டு வந்துள்ளனர். இல்லாவிடில் அங்கு இரவு தங்கிவிட்டு மறுநாள் காலையில் புறப்படுவதாகத்தான் அவர்களின் திட்டம் இருந்தது என்கின்றனர் மாணவர் முரளியின் உறவினர்கள். உடற்கூராய்வு அறிக்கை வெளியாகாத நிலையிலேயே அம்மாணவர்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வந்ததாகப் பரவும் செய்தியால் முரளியின் குடும்பத்தினர் மனரீதியாக மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.

கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு ;

முரளியின் தங்கை அபிதா கூறுகையில், ‘இறுதியாண்டு படிக்கின்ற காரணத்தால் குருவாயூர் செல்வதற்காக திட்டமிட்டு புறப்பட்டுச் சென்றனர். வேலைக்குச் சென்றுவிட்டால் இனி முடியாது என்ற காரணத்தால்தான் இந்த பயணத்தை மேற்கொண்டனர். அவர் படிக்கும் கல்லூரியில் நடைபெற்ற வளாக நேர்காணலில் (கேம்பஸ் இன்டர்வியூ) சென்னையிலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த மகிழ்ச்சியும் இந்த ட்ரிப்புக்குக் காரணம். ஆனால் இதுவே அவரது இறுதிப்பயணமாக மாறிவிட்டது. அப்பாவை இழந்த கஷ்டத்தில் வளர்ந்த முரளிக்கு எந்தவித கெட்ட பழக்க வழக்கங்களும் கிடையாது. டிப்ளமோ படித்தபோதே பகுதிநேரமாக வேலைக்குச் சென்றுதான் படிப்பையும் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டார். எங்களுக்கு இருந்த ஒரே நம்பிக்கை அவர்தான். அவரும் இறந்தபிறகு எங்கள் குடும்பம் என்ன செய்யப்போகிறது என்பது தெரியவில்லை.’ என்கிறார் தழுதழுத்த குரலுடன். 

இறப்பைவிடக் கொடுந்துயர் ;

குடும்பத்தை அடுத்து காப்பாற்றப் போகும் நபர் என்ற நம்பிக்கையில் இருக்கும்போது, எதிர்பாராத அவரது மரணம் எந்தவிதமான துயரத்தைக் கொடுக்குமோ அதுபோன்ற கொடுந்துயரில் மீள வழியின்றித் தவிக்கிறது முரளி கிருஷ்ணனின் குடும்பம். ஆறுதல் தருகிறோமோ இல்லையோ, ஆனால் இறப்புக் குறித்த தவறான தகவல்களை பரப்பி உயிரை இழந்த துயரை விடக் கொடிய துயரத்தை ஒரு குடும்பத்திற்கு யாரும் தந்துவிடக்கூடாது என்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

செய்திகள் ; காளமேகம் / எதிரொலி /. 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed