இந்திய ஒன்றிய அளவில் இருக்கக்கூடிய மாநிலங்களில் அதிக வருவாய் தரக்கூடிய மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் இருக்க கூடியது நம்முடைய தமிழ்நாடு, அதேபோல் தமிழ்நாட்டில் அதிக வருவாய் தரக்கூடிய மாவட்டங்களில் மூன்றாவது இடத்தில் இருப்பது திருவள்ளூர் மாவட்டம், இன்று திருவள்ளூர் மாவட்டத்திலேயே அதிக வருவாய் கொடுக்கக்கூடிய தாலுகாவில் முதல் இடத்தில் இருப்பது பொன்னேரி தாலுக்கா அப்படிப்பட்ட ஒரு தாலுக்கா.. இன்று தனி மாவட்டமாக தலை நிமிர்ந்து நிற்க வேண்டிய ஒரு தாலுகா… தற்போது பின்னோக்கி பயணித்து கொண்டிருப்பது பொன்னேரி தாலுகா மக்கள் அனைவரையும் வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த திருவள்ளூர் மாவட்டம், 1997 ம் ஆண்டு செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அப்போது, இந்த மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய நான்கு தாலுகாக்களும், ஊத்துக்கோட்டை , பள்ளிப்பட்டு ஆகிய இரண்டு துணை தாலுகாகளும்,

காவல்துறையை பொருத்தவரையில் திருவள்ளுவரை தலைமை இடமாக கொண்டு மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகமும், துணை கண்காணிப்பாளர் சரகங்களாக திருவள்ளூர், பொன்னேரி, திருத்தணி ஆகிய பகுதிகளில் துணை கண்காணிப்பாளர் சரகமும் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் ஒன்பது தாலுகாக்கள் இருக்கக்கூடிய நிலையில், சில பகுதிகள் சென்னை மாநகராட்சியிலும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்பது தாலுகாவில் பொன்னேரி தாலுகா அனைத்து விதமான தொழில்களும் இருக்கக்கூடிய ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

உதாரணமாக விவசாயம், நெசவுத்தொழில், மீன்பிடித் தொழில், வியாபாரங்கள் ஆகிய தொழில்கள் முக்கிய இடங்களை வகித்து வந்திருந்தாலும், தற்போது பொன்னேரி தாலுகாவில் அதிக அளவில் தொழிற்சாலைகள் உருவாகி வரக்கூடிய சூழ்நிலையில், பொன்னேரி தாலுகாவில் பெரிய, பெரிய தொழிற்சாலைகள், துறைமுகங்கள், அனல் மின் நிலையங்கள் என பலவிதமான தொழில்களையும் முன்னிறுத்தி வளர்ந்த ஒரு தாலுகாவாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் அதிக வருவாய் கொடுக்கக்கூடிய மாவட்டங்களில் திருவள்ளூர் மூன்றாவது இடம் இருப்பதற்கு முக்கிய காரணம் பொன்னேரி தாலுகா தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அதனால் தான், பொன்னேரியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து, முன்னாள் அமைச்சர் கா.சுந்தரம் அவர்களுடைய காலத்திலிருந்தே, இப்போது இருக்கக்கூடிய பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, மாதவரம், போன்ற தாலுகா இல்லாமல் சில புதிய தாலுகாக்களையும் உருவாக்கி பொன்னேரியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என கோரிக்கை இருந்து வருகிறது .

மேலும், அரசின் நிர்வாக வசதிக்கும், மக்களுடைய போக்குவரத்து வசதிகள் மற்றும் தேவைகளுக்கும் உதவியாக இருக்கும் என்ற காரணத்தாலும் , பொன்னேரியை தனி மாவட்டமாக உருவாக்கி கொடுக்க வேண்டும் என பொன்னேரி, கும்முடிபூண்டி உள்ளிட்ட பல தாலுகா மக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலை மாறி தற்போது, பொன்னேரி சட்டமன்ற தொகுதி தமிழக அரசினுடைய பார்வையிலிருந்து சற்று ஒதுங்கி இருக்கக்கூடிய சூழ்நிலையும், இருட்டடிப்பு செய்யக்கூடிய சூழ்நிலையிலும் இருந்து வருகிறது. இந்த நிலவரம் இன்று , நேற்று அல்ல கடந்த 20 ஆண்டுகளாகவே தொடர்ந்து வருவதால், இன்று பொன்னேரி தாலுகாவின் வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு பணிகள் பின் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இதற்கு அடிப்படை காரணம், பொன்னேரி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த நாகலிங்கம் அவர்கள் துவங்கி சக்கரபாணி, கேபிகே சேகர், அமைச்சர் சுந்தரம் அவர்கள் வரை அனைவரும் பொன்னேரி தொகுதியில் வசித்து வரக்கூடியவர்களாக இருந்தார்கள். இவர்கள் அனைவரையும் தொகுதி மக்கள் பார்க்க வேண்டும் என்றாலும், தங்கள் குறைகளை நேரில் கூற வேண்டும் என்றாலும், மக்கள் தங்களுடைய வீட்டில் இருந்து விடியற்காலை 6 மணிக்கு புறப்பட்டாலும், ஒரு மணி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுடைய வீட்டு வாசலில் போய் நின்று விடலாம்.

ஆனல், கடந்த 20 வருடங்களாக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்க பட்டவர்கள் யாரும் பொன்னேரியை சேர்ந்தவராக இல்லை என்பதுதான் பொன்னேரியின் பின்னடைவிற்கு முக்கிய காரணம். இதில், விதிவிலக்காக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்ராஜா அவர்களை நாம் கருத்தில் கொள்ள முடியாது. அதற்கு காரணம், அவர் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனேயே பொன்னேரியில் வந்து குடியேறி, மக்களோடு மக்களாக இன்று வரை வாழ்ந்து வருகிறார்.

ஆனால், மற்றவர்கள் அப்படியல்ல அவர்களை பொன்னேரி தொகுதி மக்கள் பார்க்க வேண்டும் என்றால், சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதிக்கு என்று வருகிறார்கள் என பலரிடம் விசாரித்து, அவர்கள் தொகுதிக்கு வரும் போது அவர்களை நேரில் சந்திக்க வேண்டிய சூழ்நிலை இன்று வரை நிலவுகிறது.

பொன்னேரி தொகுதியில் இதுபோன்ற மக்கள் பிரதிநிதிகள் கடந்த 20 வருடங்களாக இருந்து வருவதால் தான், பொன்னேரிக்கு கிடைக்க வேண்டிய பல வசதி, வாய்ப்புகள், வளர்ச்சி திட்டங்கள் ஆவடி போன்ற பகுதிகளுக்கு சென்று விட்டது. அதற்கு காரணம் அந்த தொகுதியில் ஆளுமை மிக்க மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து இருந்து வரக்கூடிய சூழ்நிலைதான்,

அதுபோன்ற, ஆளுமை மிக்க மக்கள் பிரதிநிதிகள் பொன்னேரி தாலுகாவில் அமையாத காரணத்தால், தனி மாவட்டமாக தலை நிமிர்ந்து நிற்க வேண்டிய பொன்னேரி தாலுகாவின் வளர்ச்சி பின் நோக்கி சென்று கொண்டே இருக்கிறது. அதற்கு உதாரணம் பல திட்டங்களை கூறலாம், பொன்னேரி கோட்டத்தில் இருந்த அம்பத்தூர் தாலுகா தனி கோட்டாட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பிரிந்து சென்றது. திருவள்ளூர் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டின் கீழிருந்த பொன்னேரி சரகம் ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் சென்றது , பொன்னேரி நகரின் மையப் பகுதியில் இருந்த நீதிமன்றங்கள் அனைத்தும் பொன்னேரி நகர் பகுதிக்கு தொடர்பு இல்லாமல் சோழவரம் ஒன்றியத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பொன்னேரிக்கு இதுவரை காவல் நிலையத்திற்கு தனி கட்டிடம் இல்லாதது,

சில ஆண்டுகளுக்கு முன்பு பொன்னேரி காவல் நிலையம் கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி முழுவதும் மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட டோல்கேட் அருகே காவலர் குடியிருப்பாக மாற்றி கட்டப்பட்டது, பொன்னேரிக்கு புறவழிச் சாலையை ஏற்படுத்தாதது, பொன்னேரி ரயில்வே நிலையத்தில் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் பல குளறுபடிகள், அதனால் பொன்னேரியில் இருந்து படிப்பிற்காகவோ, வேலைக்கு செல்லக் கூடியவர்களோ தினமும் பல மணி நேரத்தை வீணாக்கக்கூடிய சூழ்நிலை நிலவுவதால் பலர் பொன்னேரியில் இருந்து குடி பெயர்ந்து சென்னைக்கு செல்லக்கூடிய சூழ்நிலையும் உள்ளது. இப்படி எவ்வளவோ வளர்ச்சி திட்டங்களும், கட்டமைப்பு வசதிகளும், பொன்னேரிக்கு கிடைக்காமல் சென்றது. பொன்னேரி தாலுகாவின் வளர்ச்சிக்கு தடையாக இருந்து வருகிறது. இதே நிலை நீடித்தால், திருவள்ளூர் மாவட்டத்தை பிரித்து ஒரு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று அரசு முடிவு எடுத்து செயல்படும் சூழ்நிலையில், அந்த புதிய மாவட்டத்திற்கு தலைநகரமாக இருக்கக்கூடிய வாய்ப்பை பொன்னேரி இழந்து விடுமோ என்பதுதான் அனைவருடைய கவலையாக உள்ளது.

இந்திய ஒன்றியம், மொழி வாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட போது புதியதாக உருவான தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களே இருந்தது. ஆனால், தற்போது மாநில அரசின் நிர்வாக வசதிக்காக, 38 மாவட்டங்களாக அவை உயர்ந்துள்ளன. அந்த வகையில் பார்த்தால் பரப்பளவிலும், மக்கள் தொகையிலும், வருவாயிலும் முன்னணியில் இருக்கக்கூடிய திருவள்ளூர் மாவட்டத்தை பிரித்து பொன்னேரியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்குவதில் அரசுக்கு எந்த தடையும் இருக்காது. பொன்னேரியை தனி மாவட்டமாக உருவாக்குவதற்கு இவ்வளவு தகுதிகள் இருந்தும், பொன்னேரி மாவட்டமாக கூடிய நிகழ்வு கனவாக போய்விடுமோ? என்று நினைத்து மக்கள் வருத்தப்பட்டு கொண்டு இருக்கக்கூடிய சூழ்நிலையில் தான், தற்போது நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நமது பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் ரவி அவர்கள் ” பொன்னேரியை தனி மாவட்டமாக உருவாக்கி கொடுக்க வேண்டும் ” என பேசி இருக்கிறார்.

அவருக்கு நாம் நன்றியை தெரிவித்து கொள்வோம், இந்த கோரிக்கை என்பது இன்று அவர் சட்டமன்றத்தில் புதியதாக பேசிய பேச்சு கிடையாது. இது கடந்த 20 வருடங்களாக பொன்னேரி தாலுகா மக்கள் அனைவருடைய மனதிலும் இருக்கக்கூடிய ஒரு கேள்விதான், மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அவர் பொன்னேரி தாலுகா மக்களின் ஒட்டுமொத்த குரலை சட்டசபையில் எதிரொலிக்க செய்திருக்கிறார். மேலும், அவர் அதை நடைமுறைப்படுத்தும் வகையில் முயற்சிகள் மேற்கொண்டால் பொன்னேரி தாலுகா மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியே…

கட்டுரை / P.G.பாலகிருஷ்ணன் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed