மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள பழமையான தீபத்தூணில், வரும் நவம்பர் 24 – ம் தேதி கொண்டாடப்படவுள்ள திருக்கார்த்திகை தீபத் திருநாளன்று ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால அனுமதி வழங்கியுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.

அதன்படி, வழக்கின் இறுதி விசாரணை நிலுவையில் உள்ளதால், வரும் நவம்பர் 24-ம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று மட்டும் ஒருமுறை ஏற்பாடாக தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்படுகிறது. இது இந்த வழக்கம் குறித்த இறுதி அங்கீகாரம் அல்ல என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு கடந்த ஜனவரி 6-ம் தேதி வழங்கிய தீர்ப்பு மற்றும் அதன் கருத்துக்களுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கோயில் தேவஸ்தான நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட நபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே மலை உச்சிக்குச் சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்றும், இக்குழுவின் எண்ணிக்கையை மதுரை மாவட்ட ஆட்சியர், கோயில் செயல் அலுவலர், இந்திய தொல்லியல் துறை மற்றும் காவல் ஆணையருடன் ஆலோசித்து முடிவு செய்வார் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தீபத்தூண் அமைந்துள்ள பகுதியில் பொதுமக்கள் கூடுவதற்கோ, ஊர்வலங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கோ முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், வழக்கமான பாரம்பரிய இடங்களில் தீபம் ஏற்றுவதும், மலை மீதுள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா மற்றும் மசூதிக்குச் சென்று வழிபடுவதும் எவ்வித இடையூறுமின்றித் தொடர வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விரிவான இறுதி விசாரணையை 2027-ம் ஆண்டு ஜனவரி இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவை வரவேற்று, திருப்பரங்குன்றம் பகுதியில் இந்து அமைப்பினர் மற்றும் பக்தர்கள் உற்சாகமாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முன்பும், முக்கிய வீதிகளிலும் கூடிய இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், முருகப்பெருமானுக்கு அரோகரா கோஷங்களை எழுப்பித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும், நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கும் விதமாகத் தேங்காய்களை உடைத்தும், பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.
கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed