காந்தியடிகள் உரையாற்றிய இளந்தோப்பின் அருகே இயற்கையின் அதிசயம்!
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள சின்மயா வித்யாலயா வளாகத்தில் சுமார் 700 ஆண்டுகள் பழமையான பிரம்மாண்டமான ஆப்பிரிக்க பாவோபாப் மரம் அமைந்துள்ளது. அடன்சோனியா டிஜிட்டாட்டா (Adansonia digitata) எனப்படும் இம்மரம், ஆப்பிரிக்காவின் சவன்னா பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. அரேபிய வணிகர்களால் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படும் இம்மரம், ‘வாழ்க்கை மரம்’ (Tree of Life) என்று ற்றஅழைக்கப்படுகிறது.
சுமார் 23.80 மீட்டர் உயரமும், 17.50 மீட்டர் சுற்றளவும் கொண்ட இம்மரம், தனது பிரம்மாண்டமான அடிமரத்தில் பெருமளவு நீரைச் சேமிக்கும் தனித்துவம் கொண்டது. யானையின் பாதத்தைப் போன்ற அடிமர அமைப்பால் ‘யானை மரம்’ என்றும், இதன் பழத்தால் ‘யானைப்புளி’ என்றும் அழைக்கப்படுகிறது. வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்த இதன் பழங்கள் ஊட்டச்சத்து மிக்கவையாகும்.

இம்மரம் அமைந்துள்ள இளந்தோப்பு பகுதி, ராஜபாளையத்தின் சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும் முக்கிய இடம் பெற்றுள்ளதாக ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் போ.கந்தசாமி தெரிவித்தார்:
மகாத்மா காந்தியடிகள் ராஜபாளையத்திற்கு வருகை தந்தபோது, இதே பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தீண்டாமை ஒழிப்பின் அவசியத்தை வலியுறுத்தினார். பி.எஸ். குமாரசுவாமி ராஜா தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் சுமார் 35,000 பேர் கலந்துகொண்டதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இயற்கையின் அதிசயமாக விளங்கும் இந்தப் பாவோபாப் மரம், ராஜபாளையத்தின் வரலாற்று மற்றும் சுற்றுச்சூழல் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அரிய மரங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் இம்மரத்தைக் காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் பார்வையாளர்களும் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.
செய்திகள் : ராதாகிருஷ்ணன் / எதிரொலி . இன் / 8939476777
