உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், பிள்ளைப்பாக்கம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில், ஊராட்சி செயலாளர் ராஜூ இக்கூட்டத்தை நடத்தினார்.
நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டத்தில், ஊராட்சியின் வரவு – செலவு கணக்குகள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களைச் சமர்ப்பிக்காமலும், தீர்மானங்களை வாசிக்காமலும் கூட்டம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஊராட்சி சார்பில் வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்படாததால் தவெக நிர்வாகிகள் வாசு, பரந்தாமன் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளிடம் காரசார கேள்விகளை எழுப்பி முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணக்குகளைச் சமர்ப்பிக்காத ஊராட்சி செயலாளருக்கு அருகில் இருந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலரும் துணை போகிறாரா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியதால் கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
மேலும், விதிமுறைகளின்படி கிராம சபை கூட்டம் நடத்த போதிய மக்கள் தொகை வருகை தராத நிலையில், பெயரளவுக்கு மட்டுமே இக்கூட்டம் நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. போதிய எண்ணிக்கை இல்லையென்றால் கூட்டத்தை ஒத்திவைத்து வேறு நாளில் நடத்த விதிமுறை இருக்கும் போது, அவசர அவசரமாகக் கூட்டத்தை முடிப்பது ஏன் என்றும் தவெக நிர்வாகிகள் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, ஊராட்சியில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் வசிப்பதால், சிறுவர்-சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும், குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க கூடுதலாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
விதிமுறைகளை மீறி செயல்பட்ட பிள்ளைப்பாக்கம் ஊராட்சி செயலாளர் ராஜூ மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள் : லக்ஷ்மி கந்தன் / எதிரொலி . இன் / 8939476777
