​காஞ்சிபுரம் அருகே காற்றோ, மழையோ இல்லாத சூழ்நிலையிலும் தொடர்ந்து பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதைக் கண்டித்து, பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் திரண்டு துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் கடந்த நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்குத் துண்டிக்கப்பட்ட மின்சாரம், நள்ளிரவு 12:00 மணிக்குத் தான் மீண்டும் வழங்கப்பட்டது. அதேபோல, நேற்று மாலையும் 6:00 மணிக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டு இரவு 9:00 மணி வரை வராததால் ஆத்திரமடைந்த பரந்தூர், தண்டலம், நாகப்பட்டு, ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்தனர்.

பரந்தூரில் உள்ள துணை மின் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள், “மழையும் பெய்யவில்லை, காற்றும் வீசவில்லை; பின்ன ஏன் மின்சாரத்தை துண்டித்தீர்கள்?” என்றும் “ஒரு வண்டியைக்கூட செல்ல விடமாட்டோம்” என்றும் ஆவேசத்துடன் கோஷங்களை எழுப்பினர்.

அதனை தொடர்ந்து காஞ்சிபுரம் – பரந்தூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
​தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி கரை காவல்துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக மின் விநியோகம் சீர் செய்யப்படும் என வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து, இரவு 11:00 மணியளவில் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டது. இதன் பின்னரே பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

​இப்பிரச்சனை குறித்து ஏகனாபுரத்தைச் சேர்ந்த புஷ்கின்ராஜ் தெரிவிக்கையில்,
​”கடந்த இரண்டு நாட்களாகவே மாலை நேரங்களில் மின்சாரத்தை முழுமையாகத் துண்டித்து விடுகின்றனர். பரந்தூர், எடையார்பாக்கம், குணகரம்பாக்கம், சவுட்டுப்பாளையம், ஏகனாபுரம், செல்லம்பட்டரை உள்ளிட்ட கிராமங்களில் தொடர்ச்சியாகப் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

காற்றோ, மழையோ இல்லாத நேரத்திலும் ஏன் இந்த மின்வெட்டு என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதனால்தான் அனைத்து கிராம மக்களும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டோம்” என்றார்.

​மேலும், இந்த மின்தடைப் பிரச்சனைக்கு மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நிரந்தரத் தீர்வு காணாவிட்டால், பரந்தூர் சுற்றுவட்டார கிராம மக்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள் : லக்ஷ்மிகாந்தன் எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed