திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் கடந்த ஓராண்டு காலமாக பேருந்து நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது இதற்கு மாற்றாக பொன்னேரி தேரடி தெருவில் செங்குன்றம் மார்க்கம் மற்றும் பழவேற்காடு மார்க்கம் வழியாக பேருந்துகள் செல்வதற்கு பயணிகள் தேரடி பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

இருப்பினும் இந்த பேருந்து நிலையத்திற்கு பொன்னேரி ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வர வேண்டும். பொன்னேரி தாலுகா அலுவலகத்தில் இருந்தும், பொன்னேரி டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், எம்ஜிஆர் மீன்வள கல்லூரி உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி,வேண்பாக்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி என இப்பகுதிகளில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து தான் தேரடி பேருந்துக்கு வர வேண்டும்.
அவ்வாறு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நடந்து களைப்புற்று கடும் வெயில் வேளையில் இந்த பேருந்து நிலையத்திற்கு வந்தால் இங்கு பேருந்துகள் சரியாக இயக்கப்படாமல் குறித்த நேரம் பேருந்து வராமல் பொதுமக்கள் கடும் வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு வருகிறது.

மாநகர பேருந்துகள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு ஒரே நேரத்தில் மூன்று பேருந்துகள் நான்கு பேருந்துகள் என ஓட்டப்பந்தயத்திற்கு வருவது போல் வருகிறார்கள். இவர்களுக்கு போட்டியாக பொன்னேரி பணிமனை சேர்ந்த பேருந்துகள் மாநகரப் பேருந்துகளை பின் தொடர்ந்து முன் செல்ல பார்க்கிறார்கள்.
மாநகரப் பேருந்துக்கும் பொன்னேரி பணிமனை பேருந்திற்கும் நடக்கும் போட்டா போட்டியில் கல்லூரி மாணவ – மாணவிகளும், பள்ளி மாணவ – மாணவியர்களும், பணிக்கு சென்று வருவோரும், வியாபார ரீதியாக வெளியில் சென்று வரும் பொது மக்களும் பெரிதாக பாதிக்கின்றனர்.

கை குழந்தைகளுடன் கடும் வெயில் வேளையில் பேருந்துகள் இல்லாமல் பொதுமக்கள் அவதி உற்று வருகின்றனர். நீண்ட நேரத்திற்கு வரும் பேருந்தில் முண்டியடித்து ஏற பல்வேறு தள்ளு, முள்ளுகளுக்கு மத்தியில் பயணத்தை மேற்கொள்கின்றனர்.
பொன்னேரி பேருந்து நிலையம் இன்னும் பணிகள் நிறைவடையாத நிலையில், இந்த அவதியுறும் போக்கு எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்று பொதுமக்கள் புலம்புகின்றனர். சரியான நேர விகிதத்தில் வாகனங்களை இயக்கும் போது அது பொது மக்களுக்கு பயனுறும் வகையில் இருக்கும்.

ஆனால், நேரகாப்பாளர்கள் இல்லாமல் பொதுமக்களை வழிநடத்துவோர் இல்லாமல் தான் தோன்றித்தனமாக அரசு பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் நடந்து கொள்வதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
செய்திகள் : பழவை முத்து / எதிரொலி . இன் / 8939476777
