திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கண் வங்கி சார்பில், 41-வது தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழா ஆகஸ்ட் 25 முதல் 08- ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நிறைவுவிழா நடைபெற்றது. உலகம் முழுவதும் சுமார் 4 கோடி மக்கள் பார்வையிழந்த நிலையில் உள்ளனர். இதில் சுமார் 3.5 கோடி பேர் இந்தியாவில் உள்ளனர். இந்தியாவில் சுமார் 12 லட்சம் பேர் கருவிழி பாதிப்பினால் பார்வை இழந்துள்ளனர்.

இதே நிலை நீடித்தால், 2027-ஆம் ஆண்டில் கருவிழி நோயினால் பார்வையை இழப்போரின் எண்ணிக்கை 1.06 கோடியாக அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கருவிழி பாதிப்பினால் ஏற்படும் பார்வையிழப்பைத் தடுக்க ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் கருவிழிகள் தேவைப்படுகின்றன. இதனை வலியுறுத்தும் வகையில், நாடு முழுவதும் உள்ள கண் வங்கிகள் மற்றும் கண் மருத்துவமனைகள் சார்பில் தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார நிகழ்வுகள் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

மாணவ, மாணவியர்களிடையே கண்தானத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கவிதை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும், CSI பெல் பின்ஸ் இந்திராணி செல்லதுரை மிஷன் மருத்துவமனை, சாரதா பெண்கள் கல்லூரி, சாராள் தக்கர் பெண்கள் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் கண்தானம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.
திருநெல்வேலி மாநகரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மூலம் கண்தானம் தொடர்பான மருத்துவச் சூழலில், இறந்தவர்களிடமிருந்து கருவிழியை மருத்துவமனைகளில் இருந்து பெறுவதற்கான கண்தானம் குறித்த சிறப்பு கருத்தரங்கு நடத்தப்பட்டன.

செப்டம்பர் 05-ஆம் தேதி நடைபெற்ற நிறைவு விழாவில், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் ராணி லட்சுமி வரவேற்புரையாற்றினார்.
டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மண்டல மருத்துவ இயக்குநர் பேராசிரியர் டாக்டர் டி.லயனல்ராஜ் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் மற்றும் ஐ.என்.எஸ். கட்டபொம்மன் தெற்கு விஜயநாராயணம் சர்ஜன் லெப்டினன்ட் ஏ.ஆர்.சைதன்யா, கண்தானம் செய்த குடும்பத்தினர், கண்தானம் நடைபெறுவதற்கு உறுதுணையாக இருக்கும் இயக்கங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த கண்தான இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை டாக்டர் அபினயா தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை கருவிழிப்பிரிவு மருத்துவர் டாக்டர் ராணி லட்சுமி, மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். நிறைவில் டாக்டர் சுஜிதா நன்றியுரை வழங்கினார்.
செய்தியாளர் செ.பா.தவசிக்கனி
எதிரொலி / நெல்லை மாவட்டம்.
