கே.வி.குப்பம்: கே.வி.குப்பம் சாய் குருஜி மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில், குடியாத்தம் பன்னிரு திருமுறை மன்றம் சார்பில் பன்னிரு திருமுறை, அபிராமி அந்தாதி மற்றும் திருப்புகழ் ஒப்புவித்தல் போட்டி சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு குடியாத்தம் பன்னிரு திருமுறை மன்றத் தலைவர் பொறியாளர் எம். சுரேஷ்பாபு தலைமை வகித்தார். பள்ளித் தலைவர் துரை கோபால் முன்னிலை வகித்தார். பள்ளித் தாளாளர் நவீன் வரவேற்றார். இப்போட்டியில் 4-ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை பயிலும் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மொத்தம் 100 மாணவர்கள் பன்னிரு திருமுறை, அபிராமி அந்தாதி மற்றும் திருப்புகழ் பாடல்களை ஒப்புவித்து தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.


தமிழ் இறையியல் பாடல்களின் சிறப்பையும், திருமுறை இலக்கியத்தின் பெருமையையும் மாணவர்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, மாணவர்களின் தமிழ் ஆர்வத்தையும் ஆன்மிகப் பண்பாட்டையும் வளர்க்கும் வகையில் அமைந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆற்காடு ஓதுவார் லிங்கேஸ்வரன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். மேலும், போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் கவிதா, மெட்ரிக் பள்ளி முதல்வர் ஹேமாவதி, தமிழ் ஆசிரியர் கல்பனா உள்ளிட்ட தமிழ் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர்.

திருமுறைப் பாடல்களை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் இத்தகைய போட்டிகள், தமிழ் மொழி, சைவ சமயம் மற்றும் தமிழர் பண்பாட்டின் மீது மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் சிறந்த முயற்சியாக அமைந்தது.

செய்திகள் ; மூர்த்தி / எதிரொலி / 8939476777
