ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூனம்பட்டி பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் இரு அறைகள் தரைமட்டமானதில், ஒரு தொழிலாளி உயிரிழந்தார். காயமடைந்த ஒருவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சிவகாசி சாட்சியாபுரம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் மகன் சந்தனபாண்டியன். இவர் மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்று கூனம்பட்டி பகுதியில் கரிஷ்மா ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் உள்ள 7 அறைகளில் 15- க்கும் அதிகமான தொழிலாளர்கள் இன்று காலை வழக்கம்போல் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், சக்கரம் ரக பட்டாசு உற்பத்தி செய்த போது உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமான நிலையில், 3 அறைகள் சேதமடைந்தது. இந்த விபத்தில் அய்யம்பட்டி சிலோன் காலனியை சேர்ந்த சிதம்பரம் மகன் சக்திவேல்(55) என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்தில், படுகாயம் அடைந்த கங்காகுளத்தை சேர்ந்த கருப்பையா மகன் காளிராஜ்(50) என்பவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து குறித்து மல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்திகள் ; தேவதர்ஷினி / எதிரொலி / 8939476777
