கோரிக்கை மனுக்களுக்குப் பலனில்லாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை செய்த மக்கள், தர்ணா போராட்டத்தின் போது பெண்மணி தீக்குளிக்க முயற்சித்தால் பெரும் பரபரப்பு…
காஞ்சிபுரம் மாநகராட்சி 11-வது வார்டு, பிள்ளையார்பாளையம் திருவேங்கட அம்மன் தெருவில் 32 குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சார வசதியின்றி இருளிலேயே காலத்தை இவர்கள் கழித்து வருகின்றனர். மின் இணைப்பு கேட்டு அரசு அலுவலகங்களின் கதவுகளை 50 முறைக்கும் மேல் தட்டியும், இதுவரை விடிவு காலம் பிறக்கவில்லை.


சர்வே எண்கள் 17A, 18A, 19A பகுதிகளில் வாழும் ஏழை மக்களுக்குச் சேர வேண்டிய மின் இணைப்பை, திமுக கட்சியினரும் அதிகாரிகளும் இணைந்து சர்வே எண்கள் 20, 21-க்கு மாற்றி முறைகேடு செய்ததாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மனிதர்கள் வாழும் வீடுகளுக்கு மின்சாரம் மறுக்கப்படும் நிலையில், அப்பகுதியில் உள்ள மாட்டுக்கொட்டகை, கார் ஷெட் மற்றும் வைக்கோல் போர்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கி அதிகார வர்க்கம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர்.


தெருவில் மின்கம்பங்கள் நட்டு 3 ஆண்டுகள் முடிந்தும் வீடுகளுக்கு இணைப்பு தரப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் விஷப்பூச்சிகள் நடமாட்டத்திற்கு இடையே அச்சத்தோடு வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். குழந்தைகளின் எதிர்காலமும் படிப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. அதிகாரிகளின் இந்த அலட்சியத்தைக் கண்டித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 5 மணி நேரத்திற்கு மேலாக தீவிர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


போராட்டத்தின் உச்சக்கட்டமாக, கூட்டத்தில் இருந்த பெண்மணி ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த பெண் காவலர் சமயோசிதமாகச் செயல்பட்டு மண்ணெண்ணெய் கேனைப் பறித்ததால், அசம்பாவிதம் நல்வாய்ப்பாகத் தவிர்க்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்த மாவட்ட ஆட்சியர் தி.சினேகா, “உங்களுக்கு மின்சாரம் வழங்க வாய்ப்பில்லை” எனக் கூறியதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் விரக்தியின் எல்லைக்கே சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் கூறும்போது, “மாநகராட்சியின் மையப் பகுதியில் இருந்தும் நாங்க தினமும் செத்துச் செத்து வாழுறோம். அடிப்படை உரிமையான மின்சாரத்தைக் கூடத் தர மறுத்தா, நாங்கள் எப்படி வாழ்வது? இதே நிலை நீடித்தால் நாங்கள் அடுத்தகட்டமாக குடும்பத்தோடு மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என ஆவேசமாக பேசினர்.

அடிப்படை உரிமையான மின்சாரத்திற்காக மக்கள் உயிரைக் கையில பிடித்துப் போராடும் நிலை காஞ்சிபுரத்தில் தொடர்கிறது. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பில் மீண்டும் மீண்டும் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

செய்திகள் ; லஷ்மிகாந்தன் / எதிரொலி / 8939476777
