ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 11.09.2026 . வெள்ளிக்கிழமை அன்று தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரித்தல் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் புதிய கட்டிட கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்கள், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட சட்டம் ஒழுங்கு முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின் வருமாறு :


அஞ்சலி செலுத்த வருபவர்கள் கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகள் ;

1.அஞ்சலி செலுத்த ராமநாதபுரம் , பிற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே வர அனுமதிக்கப்படுகிறது. வாடகை வாகனங்கள் , திறந்த வெளி வாகனங்களில் வர அனுமதி இல்லை. இரு சக்கர வாகனங்கள், டிராக்டர், டாடா ஏஸி சைக்கிள் போன்ற வாகனங்களில் வர அனுமதி இல்லை .

2. சொந்த வாகனங்கள் மூலம் (கார் மட்டும்) வருகை தருபவர்கள், வாகன எண், வாகன பதிவு சான்று, வாகன ஒட்டுநர் உரிமம், வாகனத்தில் பயணம் செய்வோர் விபரங்களை 06.09.2026 தேதிக்கு முன்பாக சம்பந்தப்பட்ட உட்கோட்ட அலுவலகங்களில் (டிஎஸ்பி அலுவலகம்) அளித்து வாகன அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். இதனை வாகனத்தில் முன்புற கண்ணாடியில் ஒட்ட வேண்டும். வாகன அனுமதிச் இல்லாத வாகனங்கள் பரமக்குடி செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாது.

3.பிற மாவட்டங்களிலிருந்து சொந்த வாகனங்களில் வரும் நபர்கள் அந்தந்த மாவட்டங்களில் முறையான அனுமதி பெற்று வர வேண்டும்,

4.சொந்த வாகனங்களில் செல்பவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு வந்து செல்ல வேண்டும்,

5.வாகனத்தின் மேற்கூரையில் பயணம் செய்யக் கூடாது,

6.வாகனத்தில் ஆயுதங்கள் ஏதும் எடுத்துச் செல்லக் கூடாது. வரும் வழித்தடங்களில் வெடி போடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

8வாகனத்தில் ஒலி பெருக்கிகள் பொருத்திச் செல்லக் கூடாது, 8.வாகனங்களில் சாதி மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களைக் கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது,

9.தெளிச்சாத்தநல்லூர் சந்திப்பு முதல் சந்தைப் பேட்டை சந்திப்பு வரையிலான சாலையில் எந்த ஒரு வாகனத்தையும் நிறுத்தி வைக்க அனுமதி கிடையாது. மேலும், ஓட்டப்பாலம் ரவுண்டானா, நவீன் பேக்கரி, காவல்நிலையம், பொன்னையாபுரம் மேம்பாலம் வரையிலான சாலைகளிலும் எந்த ஒரு வாகனத்தையும் நிறுத்தி வைக்க அனுமதி கிடையாது,

10.வாகனங்களில் வரும்பொழுது வரும் வழியில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நினைத்த இடங்களில் நிறுத்தக் கூடாது,

11.அஞ்சலி செலுத்துவதற்காக கிராமங்களிலிருந்து பேருந்துகளில் வருபவர்கள் தங்கள் கிராமங்களிலிருந்து காலை 10.00 மணிக்குள் புறப்பட வேண்டும்.

12. கூடுதல் பேருந்துகளில் பிளக்ஸ் போர்டு, பேனர், கட்சி கொடிகள் டிரம்ஸ்செட் , ஒலிபெருக்கி ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது. மேலும், ஜோதி தொடர்பான உபகரணங்களை பேருந்துகளில் எடுத்து வரக்கூடாது.

13.கூடுதல் பேருந்துகளில் படிக்கட்டு , மேற்கூரையில் பயணம் செய்யக்கூடாது.

14.கூடுதல் பேருந்துகளில் பயணம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை பயணம் ஆரம்பிக்கும் முன்பே செலுத்த வேண்டும், அனைவரும் முறையாக பயணச் சீட்டு பெற்று வர வேண்டும்,

15.கூடுதல் பேருந்துகள் 11.09.2025 ஆம் தேதி ஒரு நாள் மட்டுமே இயக்கப்படும்,

16.அரசியல் கட்சிகள் , அமைப்புகளின் தலைவர்கள் வரும்பொழுது உடன் 3 சொந்த வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும், மேலும் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குறித்த நேரத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு செல்ல வேண்டும்,

17.நடைபயணமாக அஞ்சலி செலுத்த வரக்கூடாது. பரமக்குடி நகருக்குள் மட்டும் அனுமதிக்கப்பட்ட வழிதடங்களில் 1 கி.மீ தொலைவிற்குள் மட்டுமே நடைபயணமாக செல்லலாம்,

18.ஜோதி, முளைப்பாரி , பால்குடம் ஆகியவற்றை நினைவிடத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவிற்குள் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே எடுத்து வர அனுமதிக்கப்படும்

19. சொந்த ஊரில் செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு முந்தைய தினமோ, பிந்தைய தினமோ எவ்வித நிகழ்ச்சிகள் கொண்டாடவும், ஒலிபெருக்கி அமைப்பதற்கும் அனுமதி கிடையாது. செப்டம்பர் 11-ஆம் தேதி மட்டும் அவரவர்களது சொந்த ஊரில் ஒலிபெருக்கி இன்றி புகைப்படம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம். பரமக்குடி நினைவிடத்தில் செப்டம்பர் 11-ஆம் தேதி மட்டும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படும்,

20.நினைவிடத்தில் தேவேந்திரர் பண்பாட்டுக் கழகம் சார்பாக மட்டுமே கூட்டத்தை முறைப்படுத்த ஒரு ஒலிபெருக்கி மட்டும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும். நினைவிடத்திற்குள் தலைவர்கள் ஒலிபெருக்கியில் பேசுவதற்கு அனுமதி இல்லை,

21.அலங்கார ஊர்தி அணிவகுப்பு, மாட்டு வண்டியில் வருதல், சாதித் தலைவர்கள் வேடமணிந்து வருதல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை,

22.அஞ்சலி செலுத்த வருபவர்களில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மட்டும் நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கு ஏதுவாக சம்மந்தப்பட்ட அரசியல் கட்சிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 06.09.2026-ஆம் தேதி வரை அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

23. பரமக்குடி நினைவிடத்தில் 11.09.2026-ஆம் தேதி அன்று மாலை 04.00 மணிக்குள் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக்கொள்ள வேண்டும், 24 . 11.09.2026 ஆம் தேதி அன்று அன்னதானம் வழங்க உத்தேசித்துள்ள அமைப்புகள் தங்கள் விண்ணப்பத்தினை 06.09.2026-க்குள் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

மா.சிவகுரு

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed