உலகப்புகழ் பெற்ற ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவிலுக்குச் சொந்தமான திருமுக்குளம், புராதனமும், புனிதமும் வாய்ந்தது. ஆனால், இந்தக்குளம் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் அக்கறையும் காட்டாத காரணத்தால் இக்குளம் தனது தூய்மையை இழந்து அலங்கோலமாக இருக்கிறது.

இங்கு வாழும் மக்கள் தங்கள் வீட்டின் கழிவுப்பொருட்களை இங்கு கொட்டுவதாலும், குடிமகன்கள் இதைத் திறந்த வெளி மது அருந்தும் இடமாக மாற்றியதாலும், நீத்தார் கடன் செய்வோர், இறந்தவர்கள் பயன்படுத்திய அனைத்துப் பொருட்களையும் இங்கு கொண்டு வந்து கொட்டுவதாலும், இக்குளம் திறந்த வெளி குப்பைத்தொட்டியாகி விட்டது. இது கண்டு வருந்திய ஸ்ரீவில்லிபுத்தூர் இந்து பக்தர்கள் திரண்டு, இக்கோவில் குளத்தில் உழவாரப்பணிகளை மேற்கொண்டனர்.

இப்புனிதப் பணியில், நகர இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். விஸ்வ இந்து பரிஷத், பா.ஜ.க., சேவா பாரதி போன்ற இயக்கங்களின் தொண்டர்களும், பெண்களும் தாமாகவே முன் வந்து, இந்தக் குளத்தின் படிக்கட்டுகளை பௌர்ணமி தினத்தில், உழவாரப்பணி மேற்கொண்டு செய்து சுத்தம் செய்தனர்.

இந்து முன்னணி மாரிச்சாமி பக்தர்களிடம் சிறப்புரையாற்றினார்.
இதில், வேதிக்குமார், மாரிச்சாமி, ஜெயகுமார், பா.ஜ.க. கட்சியின் பிரமுகர் பிரபாகர், சீத்தாராமன், ஆர்.எஸ்.எஸ். மதன், பெருமாள், கே.ராணி, சேவா பாரதி அமைப்பின் பொறுப்பாளர் ராதா, ஓய்வு பெற்ற ராணுவ சுபேதார் சரவணன், வழக்கறிஞரும், எழுத்தாளருமான எஸ். ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மைப்பணி செய்தனர்.

இப்பணிக்கான கையுறைகளை தொழிலதிபர் ராஜேஷ் கனியும், ஈ.கே.எஸ். பார்மசி உரிமையாளரும் நன்கொடையாகத் தந்தனர்.
இறுதியில், விநாயகர் கோவில் அர்ச்சகர் கோபி, குளத்திற்கு மங்கல ஆரத்தி எடுத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த உழவாரப்பணி ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களின் பாராட்டுதலைப் பெற்றது.

செய்திகள் ; தேவதர்ஷினி / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed