கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் சங்கம், கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம் மற்றும் தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனம் ஆகியவை இணைந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு வரலாற்றுத் தடயங்களைக் கண்டறிந்து ஆய்வு செய்து வெளியிட்டு வருகின்றனர். அவ்வகையில் அண்மையில் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம் ஆனந்தூரில் யூதர்கள் குறித்த அறிய கல்வெட்டினை கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவன செயலர் கோவிந்தராஜ் கூறியதாவது:

அண்மைக் காலமாக தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த பல செய்திகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து எங்கள் ஆய்வு மூலமாக வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. அவ்வகையில் தற்போது கண்டறியப்பட்டுள்ள யூதர்கள் குறித்த கல்வெட்டும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

கேரள மாநிலம் கொச்சியில் யூதர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே குடியேறி இருந்தாலும் இதுவரை யூதர்கள் குறித்து தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணத்தை அடுத்த வாலாந்தரவை என்ற ஊரில் மட்டும் ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டு உள்ளது. 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு சூத பள்ளியான ஐநூற்றுவன் பெரும்பள்ளிக்கு வழங்கப்பட்ட தானத்தைக் குறிக்கிறது. இதனை அடுத்து யூதர்களைப் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு ஆனந்தூரில் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டு ஆனந்தூரில் உள்ள தான்தோன்றீஸ்வரம் கோயிலைச் சுற்றியுள்ள புதர்களை அகற்றும் போது பொதுமக்களால் கண்டறியப்பட்டு எங்களுக்கு தகவல் அளித்து அதன்பேரில் இங்கு வந்து ஆய்வு செய்தோம். ஏற்கனவே குலோத்துங்கன் காலத்திய வணிகர்குழு கல்வெட்டு, மூன்று நடுகற்கள் ஆகியவை இக்கோயிலைச் சுற்றியுள்ள புதர்களில் இருந்து கண்டறியப்பட்டுள்ளன. தற்போது கிடைத்துள்ள கல்வெட்டும் வணிகக் குழு கல்வெட்டே ஆகும்.

சூதகர், மண்டல வணிகர், தென்னிலங்கை வளஞ்சியர், எழுநூற்றுவர் ஆகிய நான்கு வணிகக் குழுக்கள் இணைந்து இன்குள்ள தான்தோன்றீஸ்வரமுடைய நாயனார் கோயிலில் ஒரு மண்டபத்தைக் கட்டிய செய்தியை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது. இதில் குறிப்பிடப்படும் நான்கு வணிகக் குழுக்களில் முதலாவது இருப்பது சூதகர் என்பதாகும். யூதர் என்பதையே இங்கு சூதகர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டில் வணிகக் குழுக்களில் ஒருவராக யூதர்கள் குறிக்கப்படுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

12, 13 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல கட்டங்களாக சிலுவைப் போர்கள் நடந்தபோது, யூதர்கள் தங்கள் நிலங்களை இழந்து வெளியேற்றப்பட்டனர். அவ்வாறு வந்தவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளின் கடற்கரைப் பட்டணங்களில் கைவினைஞர்களாகவும், துணிக்கு சாயம் ஏற்றுபவர்களாகவும், வணிகர்களாகவும் வாழ்ந்தனர். இவ்வணிகர்களே வணிகக் குழுக்களாக அமைந்து பிற வணிகக் குழுக்களுடன் இணைந்து நாட்டின் உள் பகுதிகளிலும் வணிகம் மேற்கொண்டதற்கு ஆதாரமாக ஆனந்தூர் சிவன் கோயிலில் இம்மண்டபத்தை எழுப்பியுள்ளதைக் கூறலாம்.

தகடூரில் இருந்து நாவற்தாவளத்துக்கு செல்லும் அதியமான் பெருவழியில் இதுவரை 3 அக்கால காதக்கற்கற்கள் கிடைத்துள்ளன. இவற்றைக்கொண்டு நாவற்தாவளம் எது என ஆய்வு செய்ததில் அது ஆந்திர மாநிலம், சித்தூர் வட்டம் பூதலப்பட்டு என்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்பெருவழி மற்றும் அதனையொட்டியுள்ள ஊர்களிலிருந்து பல வணிகக்குழு கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அப்பெருவழியில் அமைந்த ஊராக இந்த ஆனந்தூர் இருந்திருக்கிறது. எனவேதான் வணிகர்கள் தங்குவதற்கு ஏதுவாக இந்த நான்கு வணிகக் குழுக்களும் இணைந்து இக்கோயிலில் மண்டபத்தைக் கட்டியுள்ளனர் எனத் தெரிகிறது.

எனவே 10ம் நூற்றாண்டில் கேரள மாநிலம், கொச்சிப் பகுதியில் குடி யேறியதற்கும் 17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களோடு சென்னையில் குடியேறியதற்கும் இடைப்பட்ட சிலுவைப்போர் காலத்தில் யூதர்கள் தமிழகப் பகுதிக்கு வந்ததோடு அவர்கள் வணிகக் குழுவாகச் செயல்பட்டதையும் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரியப்பட்டணம் மற்றும் ஆனந்தூர் கல்வெட்டுகள் தமிழக வரலாற்றுக்கு புதிய செய்தியை வழங்கியுள்ளன என்றார்.

இந்த ஆய்வின்போது கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் சங்கத் தலைவர், நாராயணமூர்த்தி, செயலர் தமிழ் செல்வன், இணைச் செயலர் பாலாஜி, பொருளாளர் விஜயகுமார், ஆய்வாளர் சதாநந்தம் கிருஷ்ணகுமார், கிருஷ்ணகிரி அருங்காட்சியகக் காப்பாட்சியர் சிவக்குமார், காட்சிக் கூடக் காவலர் செல்வகுமார், கிராம நிர்வாக அலுவலர் அண்ணாமலை , பெரியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் சினேகா, ஆனந்தூர் சரவணன், முருகாநந்தம், நாகராஜ், கார்த்தி மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed