தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பாக நடைபெற்று வரும் பல்வேறு விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம், புளியடிதம்மத்தில் இளையான்குடி ஜோன் சார்பான குறு வட்டார சிலம்ப போட்டியானது நிறைவு பெற்று, மாவட்ட அளவிலான போட்டி சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

மாவட்டம் முழுவதிலும் இருந்து குறு வட்டார போட்டிகளில் பல்வேறு நிலைகளில் முதலிடம் பிடித்த மாணவர், மாணவியர்கள் பங்கேற்றனர்.

இதில், இளையான்குடியை சார்ந்த தாய்த்தமிழ் கலை பண்பாட்டுப்பள்ளி மாணவிகள் க.சபரிஸ்ரீ (50 கிலோ கீழ்) , ஜெ.ரஷ்மிகா(60 கிலோ கீழ்) பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் பங்கேற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனர்.

மேலும் , பதினேழு வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் மாணவி ச.ஹர்சிதா (60 கிலோ மேல்) மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து வெற்றி வாகை சூடினார்.

மூன்று மாணவிகளும் மாநில அளவில் நடைபெற உள்ள சிலம்பாட்ட போட்டியில் பங்கேற்க தகுதி பெற்று சாதனை படைத்துள்ளதையடுத்து இளையான்குடி , அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

இது குறித்து தாய்த்தமிழ் கலை பண்பாட்டுப்பள்ளியின் நிறுவனர் கவிஞர் சோதுகுடி சண்முகன் கூறியதாவது :

எங்களது இந்த சாதனை உண்மையான கடும் உழைப்பிற்கான பலன் , இதற்கு ஆளுமையாக வழிகாட்டும் ஆசான் கோகுல் சபரி சிவமே முழுமையான வெற்றிக்கு சொந்தக்காரர்.
காரணம் கடந்த 2021 ல் தாய் அறக்கட்டளை என்ற ஒன்றை நிறுவி பல்வேறு சமுதாய பணிகளான மரம் நடுதல், ரத்ததானம் வழங்கல், இயலாதோருக்கு உதவுதல் என எம்மால் முடிந்த பல்வேறு பணிகளை செய்து வரும் நிலையில், கிராமத்து தற்காப்பு கலையான சிலம்பத்தையும் காக்க வேண்டுமென முதல் முறையாக இளையான்குடி மண்ணில் தாய்த்தமிழ் கலை பண்பாட்டுப்பள்ளி என்பதன் மூலம் மாலை நேர சிறப்பு பயிற்சி வழங்க முடிவு செய்து கடந்த ஐந்து ஆண்டுகளாக இதனை நடத்தி வருகிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக் கல்வித்துறை, முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பங்கேற்று மாநில அளவில் சாதனை படைக்கும் மாணவியர்களை உருவாக்குவதில் பெருமிதம் கொள்வதாகவும்,

இதற்கு தலைமை ஆலோசகராக இருந்து வழிகாட்டும் ராமநாதபுர மாவட்ட சிலம்பாட்ட கழகத்தின் செயலாளர் தில்லைக்குமரன், இப்பயிற்சி பள்ளியின் தலைவர் சரவணன் செயலர் மாணிக்கம் ஆகியோரையும் இந்த நேரத்தில் பாராட்டி மகிழ்கிறேன் என உணர்வோடு கூறினார்.

மேலும், இந்த சாதனைகள் கிராமத்தில் இருந்து தலைமை நகரம் நோக்கி தலை நிமிரும் என்ற வேட்கையோடு ஆசான் கோகுல் சபரி சிவம், வெற்றி பெற்ற மாணவியர்கள் ' உறுதுணையான பெற்றோர்களையும் வாழ்த்தி பெருமைப் படுவதாக கூறினார்.

மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவியர்களையும் , இளையான்குடி தாய்த்தமிழ் கலை பண்பாட்டுப் பள்ளி நிறுவனர் , கவிஞர் சோதுகுடி சண்முகன், பள்ளி ஆசிரியர் கோகுல் சபரிசிவம் ஆகியோரை இளையான்குடி உள்பட மாவட்ட முழுவதும் உள்ள சிலம்பாட்ட கழகத்தினர்கள், வீரர் - வீராங்கனைகள், பெற்றோர்கள் , நகர் முக்கிய பிரமுகர்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணமாய் உள்ளனர்.

மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர் / எதிரொலி/ 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed