ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா இன்று 14ந்தேதி சிறப்பாக நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஆண்டாள் கோவில் முழுவதும் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கொண்டு வரப்பட்ட பல வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு திருப்பதி திருமலை கோவில் போல் காட்சியளிக்கிறது.

ஏராளமான உள்ளூர் வெளியூர் பக்தர்கள் மலர் அலங்காரத்தினை வியப்புடன் பார்த்து செல்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சௌ.சக்கரை அம்மாள் மற்றும் கோவில் அலுவலர்களும் திருக்கோயில் பணியாளர்களும் சிறப்பாக செய்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் மங்களப் பொருட்கள் பரிவர்த்தனை செய்யும் வழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது. இதன் பேரில், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரத்தன்று நடைபெறும் தேர் திருவிழாவின் போது ஆண்டாளுக்கு மரியாதையாக ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம், வளையல், பழங்கள், தாம்பூலம் உள்ளிட்ட மங்கள சீர்வரிசை பொருள்கள் கொண்டு வருவது வழக்கம்.

இந்த ஆண்டு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து மங்களப் பொருட்கள் கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாக அதிகாரியும் இணை ஆணையுருயமான சிவ ராம்குமார் தலைமையில் குழுவினர் மங்களப் பொருட்களை இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு கொண்டு வந்து மாட வீதிகள் வழியே மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்து கோவில் செயல் அலுவலர் சௌ. சக்கரை அம்மாளிடம் ஒப்படைத்தனர்.
அப்பொழுது, ஏராளமான உள்ளூர் வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதனைத் தொடர்ந்து மாலை மதுரை அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம் மரியாதைகளை கள்ளழகர் திருக்கோவில் அதிகாரிகள் கொண்டு வந்து சமர்ப்பித்தனர்.

செய்திகள் ; தேவதர்ஷினி / எதிரொலி / 8939476777
