மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஆறு மாதத்திற்கு மேலாக கிடப்பில் கிடக்கும் தார் சாலை அமைக்கும் பணி – சாலை அமைத்தால் மட்டுமே குடிநீர் வழங்கப்படும் என கூறும் ஊராட்சி நிர்வாகம்
அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் மேலக்கால் நாகமலை காலனி மக்கள் – நடவடிக்கை எடுக்குமா? மாவட்ட ஆட்சியர் தலையிட கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் கிராமத்தில், மலைப்பகுதியில் அமைந்துள்ள நாகமலை காலனியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக அடிப்படை வசதிகளின்றி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் ஏனோ பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இந்த சாலை பணி தொடங்கப்பட்ட போது ஏற்கனவே இப்பகுதிக்கு அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் சேதம் அடைந்ததால் இப்பகுதி மக்கள் தற்போது வரை குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். இது குறித்து மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது சாலை பணிகள் நிறைவடைந்தால் மட்டுமே குடிநீர் குழாய் அமைக்கப்படும் என தெரிவித்தாக கூறப்படுகிறது.
சாலை முழுவதும் குண்டும் குழியுமாக ஆபத்தான நிலையில் உள்ளது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகளுக்கு அடிக்கடி விபத்து ஏற்படும் சூழல் ஏற்படுவதாகவும் இந்த சாலை வழியாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும் தினமும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் மேலக்கால் ஊராட்சி நிர்வாகம் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோரிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதிலும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் தற்போது வரை சாலை அமைக்காமலும் குடிநீர் வசதி சரி செய்யாமலும் இருப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

எனவே, துறை சார்ந்த அதிகாரிகளும் மற்றும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு, மேலக்கால் நாகமலை காலனி மக்களின் நீண்டகால கோரிக்கையான சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசிகளை விரைந்து செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள் ; காளமேகம் எதிரொலி / 8939476777
