கோடை விடுமுறைக்கு பிறகு திறக்கப்பட்ட அரசு பள்ளி, முதல் நாளிலேயே மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு, முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு மடிக்கணினி மற்றும் நிதியுதவி வழங்கி பாராட்டு, கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகை தந்தனர்.

சுமார் 1400 மாணவர்கள் பயின்று வரும் இப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி திறப்பு நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம், ஒழுக்கம், பள்ளி விதிமுறைகள் மற்றும் புதிய கல்வியாண்டிற்கான இலக்குகள் குறித்து தலைமை ஆசிரியர் மோகன்செல்வம் சிறப்புரையாற்றி வழிகாட்டினார்.



தொடர்ந்து, மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு பாராட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்தப் பள்ளியில் பயின்று, இந்த ஆண்டு நடைபெற்ற பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செந்தாமரைக்கண்ணன் தனது சொந்த நிதியிலிருந்து சாதனை மாணவர்களுக்கு புதிய மடிக்கணினிகள் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்கி பாராட்டினார். மேலும், மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்தது.



அப்போது பேசிய, செந்தாமரைக்கண்ணன், அரசு பள்ளி மாணவர்களும் உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து கடின உழைப்பின் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்றும், கல்வியே சமூக முன்னேற்றத்திற்கான மிகப்பெரிய ஆயுதம் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், புதிய கல்வியாண்டில் மாணவர்கள் ஒழுக்கத்துடனும், தன்னம்பிக்கையுடனும் கல்வியில் கவனம் செலுத்தி சிறப்பான தேர்ச்சி பெற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



புதிய கல்வியாண்டின் முதல் நாளிலேயே சாதனை மாணவர்களை கவுரவித்து, மற்ற மாணவர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.

லோட்டஸ் லட்சுமிகாந்தன்.இ காஞ்சிபுரம் / 94875 48077
