பாலமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு வயது குழந்தைக்கு சிகிச்சை பெற கண்ணீருடன் வந்த தாய்
மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காமல் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல கூறிய மருத்துவர்கள்
ஆம்புலன்ஸ் இருந்தும் ஆம்புலன்ஸ் தர மறுத்து “இலவச பேருந்தில் செல்லுங்கள்” என்ற மருத்துவர் கூறியதாக குற்றச்சாட்டு ;

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள அரசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, கணவனை இழந்து கூலி வேலை செய்து தன் 2வயது ஆண் மற்றும் 4 வயது பெண் குழந்தைகளை பராமரித்து வருகிறார்.

இந்நிலையில், இவரது இரண்டாவது குழந்தையான ஆண் குழந்தைக்கு திடீரென கடுமையான வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை மிகவும் மோசடைந்தது. இதனால் பதறிப்போன கிருஷ்ணவேணி குழந்தையைப் பாலமேடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தார்.

​அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், முதலுதவி அளித்து விட்டு “குழந்தையின் நிலைமை மிக மோசமாக உள்ளது. இன்னும் இரண்டு மணி நேரத்தில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள்” எனக் கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கிருஷ்ணவேணி, “இரண்டு மணி நேரத்திற்குள் என்னால் எப்படி அவ்வளவு தூரம் செல்ல முடியும்? எனக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு ஏற்பாடு செய்து தாருங்கள்” என்று கெஞ்சியுள்ளார். அதற்கு அங்கிருந்த மருத்துவர், “பெண்களுக்கு அரசுப் பேருந்து இலவசம் தானே, பேருந்திலேயே அழைத்துச் செல்லுங்கள்” என்று அலட்சியமாகப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் இருந்தும் இவ்வாறு அரசு இலவச பேருந்தில் செல்லுங்கள் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

​அவசரக் காலத்தில் என்ன செய்வது என்று தெரியாமல், தன் குழந்தையைக் கைகளில் ஏந்தியபடி கண்ணீர் மல்க கிருஷ்ணவேணி என்ன செய்வதென்று தெரியாமல் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார். அப்போது, தமிழக வெற்றி கழக எம்.எல்.ஏ கருப்பையா மருத்துவமனை ஆய்விற்காக வரவிருந்ததால், அங்கு செய்தியாளர்கள் பலர் காத்திருந்தனர்.

குழந்தையுடன் அழுதுகொண்டே வந்த பெண்ணைப் பார்த்த செய்தியாளர்கள், அவரிடம் விபரம் குறித்துக் கேட்டனர். அப்போது, மருத்துவர்கள் தங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் வசதி செய்து தர மறுப்பதையும், அலட்சியமாகப் பேசுவதையும் செய்தியாளர்களிடம் அந்தத் தாய் கண்ணீருடன் விவரித்தார். இந்தத் தகவல் உடனடியாகப் பரவியதை அடுத்து, விபரீதத்தை உணர்ந்த மருத்துவக் குழுவினர் விரைந்து வெளியே வந்து, அந்தப் பெண்ணையும் இரு குழந்தையையும் மீண்டும் மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றனர். குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதோடு, உடனடியாக மருத்துவமனையில் நின்றிருந்த 108 ஆம்புலன்ஸில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

​செய்தியாளர்களின் தலையீட்டால் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது. எனினும், அவசர சிகிச்சைக்கு தேவைப்படும் குழந்தைக்கு இலவசப் பேருந்தைப் பரிந்துரைத்த மருத்துவர்களின் இத்தகைய அலட்சியப் போக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள் : காளமேகம் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed