தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் தா.தனபாண்டியன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இன்று திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று அவர் வாக்குக் கேட்டார்.

ஆன்மீகமும் அரசியலும் இணைந்த ஒரு மாற்றத்தை மக்கள் விரும்புவதாகத் தெரிவித்தார். முக்கியமாக, “நான் இந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற பின்பு, பல ஆண்டுகளாகத் தடைபட்டிருக்கும் அல்லது முறையாக முன்னெடுக்கப்படாத திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் நிகழ்வு நிச்சயம் உறுதி செய்யப்படும். இது எனது மிக முக்கியமான தேர்தல் வாக்குறுதி,” என உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்தார்.

வேட்பாளர் தனபாண்டியன் கோவில் வாசலில் பிரச்சாரம் செய்தபோது, அங்கு கூடியிருந்த சிவனடியார்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆன்மீகப் பற்றும், தொகுதி வளர்ச்சிக்கான அவரது நோக்கத்தையும் பாராட்டிய சிவனடியார்கள், முருகப் பெருமானின் அடையாளமான ‘வெற்றி வேல்’ ஒன்றினை அவருக்கு வழங்கி ஆசி வழங்கினர். இது அங்கிருந்த தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து பேசிய சிவனடியார்கள் மற்றும் வேட்பாளர் தரப்பினர், கடந்த பல தசாப்தங்களாகத் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திராவிடக் கட்சிகள் ஆன்மீக மரபுகளைப் புறக்கணிப்பதாகக் குற்றம் சாட்டினர். “திருப்பரங்குன்றம் மண்ணில் மாற்றத்தைக் கொண்டு வரவும், திராவிடக் கட்சிகளை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்றவும் மக்கள் தா.தனபாண்டியனுக்கு வாக்களிக்க வேண்டும்” எனச் சிவனடியார்கள் ஆதரவு தெரிவித்தனர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed