விழாவின் தொடக்கமாக, இன்று காலை மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, சுவாமிக்கு மனதைக் கவரும் வகையில் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, திருக்கல்யாண வைபவத்திற்காக ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத உற்சவ மூர்த்திகள் பட்டு வஸ்திரங்கள் மற்றும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு மணமேடைக்கு எழுந்தருளினர்.

இந்து பாரம்பரிய முறைப்படி, கணபதி பூஜையுடன் திருக்கல்யாண உற்சவம் தொடங்கியது. காப்பு கட்டுதல், பூணூல் அணிவித்தல் போன்ற புனிதச் சடங்குகளைத் தொடர்ந்து, உலக நன்மைக்காகச் சிறப்பு ஹோமங்கள் வளர்க்கப்பட்டன. மகா சங்கல்பம், மாலை மாற்றுதல் மற்றும் பூரண ஆகுதி சமர்ப்பித்தல் போன்ற வைபவங்கள் வரிசையாக நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, முருகப்பெருமானுக்குப் பக்தர்கள் கொண்டு வந்த சீர் வரிசைகள் சமர்ப்பிக்கப்பட்டன. விழாவின் உச்சகட்டமாக, வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்களை முழங்க, மேளதாளங்கள் அதிர, ஸ்ரீவள்ளி மற்றும் தேவசேனா ஆகியோருக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடந்தேறியது.

திருக்கல்யாணத்தின் நிறைவாக மகா மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் திருக்கோவில் சார்பில் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
செய்திகள் : மாருதி மனோ எதிரொலி / 8939476777
