திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ஊரணம்பேடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் முனுசாமி – முனியம்மா தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களது மூத்த மகன் சீனிவாசன் 15 அருகே உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முனுசாமி – முனியம்மா தம்பதியர் தங்களது மகளை அழைத்துக் கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர்.

அவர்களின் மூத்த மகன் சீனிவாசன் நேற்று மாலை கபடி போட்டி விளையாடி விட்டு, தமது பாட்டியுடன் இரவு வீட்டில் தூங்கி உள்ளார். அதிகாலையில் தூங்கி எழுந்த மூதாட்டி வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக குடிசை வீடு திடீரென தீப்பற்றி மள மள வென கொழுந்து விட்டு எரிந்துள்ளது.
அதில், வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்த சீனிவாசன் தீயில் சிக்கி கொண்டு அலறியடித்துள்ளார். அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முற்பட்டனர். மேலும், தீயணைப்பு வீரர்களும் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் குடிசை எரிந்து சிறுவன் மீது விழுந்ததில் உடலில் தீப்பற்றி தீயில் கருகி சீனிவாசன் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடிசை வீடு தீப்பற்றி எரிந்ததில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுவன் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகள் : லோகநாதன் / பொன்னேரி / எதிரொலி / 8939476777
