திருவள்ளூர் மாவட்டத்தில் பனை சார்ந்த தொழில்களை இந்த மாவட்ட மக்களுக்கு உருவாக்கி கொடுக்க வேண்டும் எனவும், அதனால் இந்த மாவட்டத்தில் கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு தற்சார்பு பொருளாதார வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் அவர்கள், முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 1,000 பெண்களுக்கு பனை ஓலையில் கைவினை பொருட்கள் செய்வதற்கு பயிற்சி வழங்க முயற்சி மேற்கொண்டார்.

அதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர், ஜெயக்குமார் அவர்கள் பனை ஓலை பயிற்சி முகாம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தன் மூலம், கடந்த 20 ம் தேதி கடம்பத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகே உள்ள, சேவை மையக் கட்டிடத்தில் முதல் பனைஓலை பயிற்சி மைய முகாமை துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 25 ம் தேதி மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு ஊராட்சி சமுதாய கூடத்தில் இரண்டாவது பயிற்சி முகாமை மீஞ்சூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி அவர்கள் துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் பயிற்சி பெறுவதற்காக வந்திருந்த பெண்களிடையே பேசுகையில், நமது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நமது மாவட்டத்திலுள்ள பெண்கள் இந்த பனை ஓலை பயிற்சியை பெற்று, நீங்கள் சுய வேலை வாய்ப்பை பெறுவதன் மூலம், தற்சார்பு பொருளாதாரம் வசதி பெற வேண்டும் என்பதற்காக தான், இந்த பனை ஓலை பயிற்சி முகாமை நடத்தி வருகிறார்.

வருங்காலங்களில் நமது திருவள்ளூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதன் மூலம் நீங்கள் தயாரிக்க கூடிய பொருட்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும் என்றும் ஊக்கமளிக்கும் வகையில் பேசினார்.
மேலும், அவரை தொடர்ந்து பயிற்சி மையத்தின் முதல்வர் பிரபாகரன் அவர்களும், பனை ஓலை பயிற்சி மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரன், பயிற்சி ஆசிரியர் சரஸ்வதி ஆகியோர் உரையாற்றினர் இறுதியாக ஊராட்சி செயலாளர் செந்தில் நன்றி கூறினார்.
இந்த பயிற்சி முகாம் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தவிர, மற்ற நாட்களில் தொடர்ந்து மார்ச் 24ம் தேதி வரை (1 மாதம்) நடைபெறும்.

செய்திகள் : பழவை முத்து / எதிரொலி / 8939476777
