ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் 4 மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் இணைந்து, கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகம், அருங்காட்சியகம் மற்றும் பழமையான கோயில்களுக்கு சிறப்பு களப்பயணம் ஒன்றை மேற்கொண்டனர்.
நிகழ்வின் முன்னதாக முதலில் கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்திற்குச் சென்ற மாணவர்களுக்கு, நூலக அலுவலர் நந்தகுமார் அவர்கள் சிறப்பான வழிகாட்டுதலை வழங்கினார். அவர் மாணவர்களிடம் நூலகத்தின் பயன்கள், குழந்தைகளுக்கான தனிப்பிரிவு மற்றும் நூலகத்தில் செயல்படும் பிற பிரிவுகள் குறித்து விளக்கினார். மேலும், இந்த நூலகத்தைப் பயன்படுத்தி மாநில அளவிலான வேலைவாய்ப்புத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் குறித்த ஊக்கமளிக்கும் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்களுக்காகவே இரண்டு தனி அறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், அங்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து பயிற்சி பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐந்தாம் வகுப்புப் பாடத்திட்டத்தில் அகழ்வாய்வுகள் மற்றும் அருங்காட்சியகம் குறித்த பாடம் இடம்பெற்றுள்ளதால், அதை நேரில் கண்டு கற்பதற்காக மாணவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வுக் குழுவின் தலைவர் நாராயண மூர்த்தி அவர்கள், அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பழங்காலப் பொருட்கள், தமிழர்களின் பாரம்பரியமான ஏறுதழுவுதல் மற்றும் நடுகற்களின் வரலாற்றுச் சிறப்புகள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

அருங்காட்சியகப் பயணத்தைத் தொடர்ந்து, மாணவர்கள் கிருஷ்ணகிரியில் உள்ள பத்மாவதி கோயிலுக்கும், 976 ஆண்டுகள் பழமை வாய்ந்த குணமதீஸ்வரர் திருகோயிலுக்கும் சென்றனர். அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டுகளைப் பார்வையிட்டு, அவற்றின் தொன்மை குறித்தும் நேரில் அறிந்து வியந்தனர்.
இந்நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழக (PTA) தலைவர் சரவணன், மாருதி மனோகரன், விஜயகுமார் , தமிழ் செல்வன் மற்றும் அருங்காட்சியகப் பணியாளர் பெருமாள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
செய்திகள் : மாருதி – மனோ கிருஷ்ணகிரி / எதிரொலி / 8939476777
