கவுன்சிலர் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.25 லட்சமாக உயர்வு!

தாமிரபரணி நதியைப் பாதுகாக்க ‘நதி முகப்பு மேம்பாட்டுப் பணி’ தொடங்கத் திட்டம்:

பாதாள சாக்கடை கழிவுநீரை சுத்திகரிக்க ரூ.102.32 கோடியில் சுத்திகரிப்பு நிலையம்!

திருநெல்வேலி.பிப்.23
திருநெல்வேலி மாநகராட்சியின் 2026- 2027 ஆம் ஆண்டிற்கான திட்டப் பணிகள் குறித்த வரவு- செலவு அடங்கிய “பட்ஜெட் கூட்டம்” மாமன்றக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் மோனிகா ராணா, துணை மேயர் கே.ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மேயர் கோ.ராமகிருஷ்ணன், மாமன்றக் கூட்டத்தில் திருநெல்வேலி மாநகராட்சியின் வரவு செலவு திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
அப்பொழுது பேசிய மேயர் கோ.ராமகிருஷ்ணன், “திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதியை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்” என அறிவித்தார்.

மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அலுவலகத்தில் அமர்ந்து பணிபுரிவதற்கு வசதியாக நெல்லை மாநகராட்சியின் நான்கு மண்டல அலுவலகத்திலும் உரிய கட்டட வசதி செய்து கொடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர், திருநெல்வேலி ஆகிய நான்கு மண்டலங்களிலும் மண்டலத்திற்கு ஒரு நவீன உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும், மாநகராட்சிப் பகுதியின் தெருக்களில் சுற்றித் தெரியும் “தெரு நாய்களைப் பிடித்து” இராமையன்பட்டி உரக்கடங்கு அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் பாதுகாப்பான கூரை அமைத்து பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய மேயர் கோ.ராமகிருஷ்ணன், “வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி நதியை மாசுபடுவதில் இருந்து தடுக்கும் வகையில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.59.05 கோடி மதிப்பில் நதியின் முகப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், இராமையன்பட்டி உரக்கிடங்கு வளாகத்தில் ரூ.102.32 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை கழிவு நீரை சுத்திகரிக்க ‘கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்’ அமைக்கப்படும் எனவும் அறிவித்தார்.


திருநெல்வேலி மாநகராட்சி பகுதியின் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடிப்பதற்கு ரூ.60 லட்சம் மதிப்பில் வாகனம் வாங்கப்படும் எனவும், திருநெல்வேலி மாநகராட்சியின் 4 பகுதியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் முன்னோடி திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இத் திட்டத்தினை திருநெல்வேலி மாநகராட்சி முழுமையும் செயல்படுத்தும் வகையில் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதி முழுவதும் ’24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம்’ விரைவில் செயல்படுத்தப்படும்” என நெல்லை மாநகராட்சியின் மாமன்ற பட்ஜெட் தாக்கல் கூட்டத்தில் அறிவித்தார், நெல்லை மேயர் கோ.ராமகிருஷ்ணன். பட்ஜெட் தாக்கல் கூட்டத்தில் திருநெல்வேலி மாநகராட்சியின் மண்டலத் தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள், உதவி ஆணையாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நெல்லை செய்தியாளர்
செ.பா.தவசிக்கனி / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed